"உங்க மாமனாரிடம் கேளுங்க.. வீட்டுக்குப் போய் உங்க அப்பாகிட்ட கேளுங்க!" ஆதவ் அர்ஜுனா VS உதயநிதி என மாறிய சட்டமன்றம்!

வீட்டுக்கு போய் உங்க அப்பாகிட்ட கேளுங்க ஏன் வாங்குனாருனு உங்க அப்பா செல்லுவாரு
aadhav arjuna
Published on
Updated on
1 min read

இன்று 3-வது நாளாக இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் மற்றும் மதுவிலக்கு குறித்து பேசப்பட்டது. அதில் மதுவிலக்கு குறித்து பேசும்போது தவெக உறுப்பினர்கள் ஊழல் குறித்து கடந்த திமுக அரசை குற்றம் சாட்டினார்கள். அதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எ வ வேலு “ஊழல் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.. அப்படி ஊழல் என்று யார் பேசினாலும் சரி.. அதற்குரிய ஆதாரத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து பேச வேண்டும்” என்று  குறிப்பிட்டார். அதற்கு தவெக அமைச்சர் அருண் குமார் “கடந்த ஆட்சியில் அமலாக்கத்துறை ஆதாரத்துடன் ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.. ஆனால் அந்த அரசு எந்த FIR-ம் பதிவு செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.

அதையடுத்து விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் பேசுகையில்.. “ஆதாரம் கேட்கிறார்கள்.. திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறார இல்லையா?” என்றும் மேலும் திமுகவினர் சிலர் சாராய ஆலை நடத்துவதாக குறிப்பிட்டு பேசினார். அப்போது எதிர் கட்சியினர் ‘லாட்டரி லாட்டரி’ என்று கூச்சலிட்டனர். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “லாட்டரி என்கிறார்கள்..  அப்புறம் ஏன் தொள்ளாயிரம் கோடி லாட்டரி நிறுவனத்திடம் வாங்கினீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். “தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள்” என்றும் “நான் எந்த தொழிலிலும் இல்லை எந்த நிறுவனமும் நடத்தவில்லை..” என்றும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளிக்க தொடங்கிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் “திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினீர்கள் என்று கேட்டார்கள்.. அதை கொடுத்தது அவருடைய மாமனார் தான்.. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார். இதற்கு உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “அது அவருக்கும் உங்க அப்பாவுக்கு தான் தெரியும்.. எனக்கு தெரியாது.. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என பதிலளித்தார். மேலும் “வீட்டுக்கு போய் உங்க அப்பாகிட்ட கேளுங்க ஏன் வாங்குனாருனு உங்க அப்பா செல்லுவாரு” என்றும் பதிலளித்தார். 

இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. பின்னர் “அவையில் இல்லாதவர்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டாம்” என்று மீண்டும் சபாநாயகர் குறிப்பிட்டார். மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர் செல்வம் “அரசியல் கட்சிகள் நன்கொடையாக பணம் பெறுவது இயல்பு அதை ஊழல் என்று உருவகப்படுத்துவது தவறு” என்று குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com