திருட்டு சிலைகளை நன்கொடையாக கொடுத்த நபர்...! இரு பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு..!

ஈ.சி.ஆர்-ல் உள்ள தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகத்தில் இருந்து இரு பழங்கால சிலைகள் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்பு.
திருட்டு சிலைகளை நன்கொடையாக கொடுத்த நபர்...! இரு பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு..!
Published on
Updated on
1 min read

சென்னை ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதியில் உள்ள தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகத்தில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி முத்துராஜா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் வீணாதரர் மற்றும் ரிஷப்தார் ஆகிய பழங்கால இரு உலோக சிலைகள் தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், சிலைகள் குறித்து தக்ஷிண் சித்ரா மேலாளர் அசோக் குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூரைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் நன்கொடையாக அந்த சிலைகளை வழங்கியது தெரிய வந்தது.

பின்னர் மாசிலாமணியை தொடர்புகொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் உரிய ஆவணங்கள் இல்லாத அந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இரு சிலைகளும் சோழர் காலத்தைச் சேர்ந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

திருட்டு சிலைகளை நன்கொடையாகக் கொடுத்ததாக தக்‌ஷின் சித்ரா மேலாளர் அசோக் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூரைச் சேர்ந்த மாசிலாமணி மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல் துறைக்கு அனுப்பி அதன் தொன்மை குறித்து கண்டறியவுள்ளதாகவும், மேலும் அந்த சிலைகள் எந்த கோவில்களைச் சேர்ந்தது என விசாரணை நடத்தி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com