”தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக இருப்பது இவர் மட்டும் தான்” அண்ணாமலை பேட்டி!

”தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக இருப்பது இவர் மட்டும் தான்” அண்ணாமலை பேட்டி!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில்  தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக பிரதமர் மட்டுமே இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் ' மனதின் குரல் ' நிகழ்ச்சியின் 100-வது வார உரையின் ஒளிபரப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,சென்னை நடுக்குப்பத்தில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தொலைபேசி உரையாடல் பொய்யானது என புகாரளித்தால் , முழு உரையாடலையும் வெளியிட்டு அந்த உரையாடல் எங்கே , யாரிடம் பேசியது என்ற விவரத்தை வெளியிட தாங்கள் தயாராக உள்ளதாக கூறினார். மேலும், எந்த கட்சி ஊழல் செய்திருந்தாலும் அதுகுறித்து வெளியிடுவோம் என்றார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பை  தாம் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும், இளவரசனான அவருக்கு 20 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது என சொல்லியிருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் திமுகவினர் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா எனவும் அவர் வினவினார்.  

தமிழ்நாடு , புதுச்சேரியில் 40  இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை பாஜக மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் மாறாது  எனவும் இதுகுறித்து  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைவரும் பார்ப்பீர்கள் எனவும் அண்ணாமலை கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com