பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே பள்ளிக்கு சீல்...திருச்சியில் மாணவர்கள் கவலை!

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே பள்ளிக்கு சீல்...திருச்சியில் மாணவர்கள் கவலை!
Published on
Updated on
1 min read

திருச்சியில் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட பள்ளிக்கு  சீல் வைத்ததால்  மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர். 

கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு காலநீட்டிப்பு செய்யப்பட்டது. 6 - 12 ஆம் வகுப்பு வரை 12 ஆம் தேதியும், 1 முதல் 5 வகுப்பு வரை 14 ஆம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, 6 - 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆரவாரத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர். 

இந்நிலையில், திருச்சியில் உள்ள ஒரு பள்ளி சீல் வைக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதலே புனித சூசையப்பர்  மேல்நிலைப்பள்ளி பள்ளி, தூய மரியன்னை தொடக்கப்பள்ளி, ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பள்ளி என மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  

ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு நீர் நிலைகளை ஆக்கிரமித்து பள்ளியை கட்டி இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி, நீர்நிலைகளில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதனை ஏற்ற பள்ளி நிர்வாகம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அகற்றிக் கொள்கிறோம் என்று கூறியது. இருப்பினும், அதனை பள்ளி நிர்வாகம் செய்யாததால் நேற்றைய தினம்  நீர்நிலையில் உள்ள இந்த பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. 

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6 - 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பள்ளி வாயில் முன்பு காத்திருந்ததால், அவர்களுக்கு சொந்தமான  தற்காலிக கட்டிடத்தில் மாணவர்களை அமர வைக்கப்பட்டனர். பின்னர் கல்வித் துறை அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்து போதுமான வசதி இல்லை, கட்டிடத்திற்கு உரிய அனுமதி இல்லை எனக் கூறி மாணவ, மாணவிகளை இங்கு பாடம் நடத்தக் கூடாது, மீறி பாடம் நடத்தினால் இந்த கட்டிடத்திற்கும் சீல் வைப்போம் என எச்சரித்தனர்.  இதனால், கோடை விடுமுறை முடிந்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதால் மிகுந்த கவலையில் உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com