டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு .. எஸ்.பி வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் முழுமையாக இருக்கு - தமிழக அரசு

டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி-க்கு எதிராக ஆதாரங்கள் முழுமையாக திரட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு .. எஸ்.பி வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள்  முழுமையாக இருக்கு - தமிழக அரசு
Published on
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், மற்றும் பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு அதுதொடர்பான மனுக்களையும் முடித்து வைத்தனர். 

இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில்,  வழக்கு தொடங்கப்பட்டதால் அதனை ரத்து  செய்ய வேண்டும் என  தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக காவல்துறை மற்றும் அறப்போர் இயக்கம் தரப்பில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

இந்நிலையில் இவ்வழக்கில்  தமிழக அரசு இன்று பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி க்கு எதிராக ஆதாரங்கள் முழுமையாக திரட்டப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. . மேலும் டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி வேலுமணிக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கக் கூடாது எனவும் தமிழக அரசு தன்னுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. நாளை இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com