"துறைமுகங்கள் விரிவாக்கத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்" அமைச்சர் எ.வ.வேலு!

"துறைமுகங்கள் விரிவாக்கத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்" அமைச்சர் எ.வ.வேலு!
Published on
Updated on
2 min read

அதிக ஜி.எஸ்.டி வருவாய் வழங்கும் தமிழகத்திற்கு, துறைமுகங்கள் விரிவாக்கத்திற்கு நிதியை ஒன்றிய அரசு  வழங்க வேண்டுமென அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு டெல்லியில் அக்டோபர் 17ம் தேதியில் இருந்து 19 வரை நடைபெறுகிறது.  அது குறித்த விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சென்னை துறைமுகம் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம்  சார்பில் நிகழ்ச்சி ஒன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பாநந்தா சோனோவால், தமிழக பொதுப்பணித்துறை  அமைச்சர் எ.வ.வேலு, சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் ஐ.எ.எஸ், சென்னை துறைமுகத்தின் துணை தலைவர் விஸ்வநாதன் ஐ.எ.எஸ், காமராஜர் துறைமுக இயக்குனர் இரேன் சைந்தியா மற்றும் துறைசார் செயலாளர்கள், அலுவலர்கள், தொழில் சார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில், வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கும் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2023  (GLOBAL MARITIME INDIA SUMMIT 2023) குறித்து விவரிக்கப்பட்டது.

குறிப்பாக இந்திய கடல்வழி பொருளாதாரத்தை  உலகளாவிய அளவில் ஊக்குவிப்பதற்கும், கடல்சார் தொழில் முதலீடுகளை ஈர்பதற்கும், இந்திய கடல்வழி சுற்றுலா மற்றும் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சித்திட்டங்களை உருவாக்கவும், சர்வதேச கடல்வழி சார்ந்த அறிவை பெருக்கும் நோக்கத்தோடும் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடானது நடத்தப்பட உள்ளது.  

3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. கடல்சார் முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன மற்றும் கடல்சார் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கடல் கடந்து பயணம் மற்றும் வாணிபம் செய்வதில் பண்டைத் தமிழர்கள் முக்கிய பங்காற்றி உள்ளார். கடல் நீரோட்டத்தை அறிந்து கடல் பயணத்தை கொண்டு வந்தவனும் தமிழன் தான். கடல்வழியாக தங்கள் ஆட்சியை விரிவாக்கம் செய்த சோழர்கள் அதோடு கலாச்சாரம், வாணிபம் உள்ளிட்டவற்றையும் பல்வேறு நாடுகளோடு விரிவுபடுத்தினர்.  பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் கடல்வழிப் போக்குவரத்திலும், வாணிபத்திலும் தேர்ந்திருந்தனர். அதற்கான சான்றுகளும் உள்ளன, இந்தியாவின் 3 முக்கிய துறைமுகங்கள் கொண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்த்து தொழிற்சாலைகள் உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெருக்கும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். சிறு துறைமுகங்கள் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். முக்கியமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். இதன் மூலம் தென்பிராந்திய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்றார். மேலும் இது ஏற்றுமதி இறக்குமதியாளர்களின் முக்கிய கோரிக்கையாகவும் உள்ளது. அதிக ஜி.எஸ்.டி வழங்கும் மாநிலமான தமிழகத்திற்கு துறைமுகங்களை விரிவுபடுத்துவதன் மூலம் பெருமளவு வேலைவாய்ப்பை பெருக்க ஒன்றிய அரசும், அமைச்சர் அவர்களும் வழிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com