
தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி கொடியை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழா:
தமிழக காவல் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழக காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடி வழங்கிய குடியரசு துணை தலைவர்:
அதனைத்தொடர்ந்து தமிழக காவல்துறைக்கு சிறப்பு மிக்க ஜனாதிபதி கொடியை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
மு.க. ஸ்டாலின் உரை:
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜனாதிபதி கொடியை பெற்றதன் மூலம் தமிழக காவல்துறை உயர்ந்த அந்தஸ்தை பெறுவதாக பெருமிதம் தெரிவித்தார். மக்களை காப்பதே தமிழக காவல்துறையின் முழு முதல் பணி என குறிப்பிட்ட அவர், தமிழக காவல்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது எனவும் பெருமைபட கூறினார்.
வெங்கையா நாயுடு உரை:
நிகழ்ச்சியில் சிறைப்புரையாற்றிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மகளிர் காவல் நிலையம், மகளிர் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாராட்டினார்.
தமிழகத்திற்கு பெருமை:
இந்தியாவில் இதுவரை 10 மாநிலங்களுக்கு மட்டும் இச்சிறப்புக்கொடி வழங்கப்பட்டுள்ள நிலையில், தென்மாநிலங்களில் இக்கொடியை பெறும் அந்தஸ்தை தமிழகம் முதலாவதாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.