கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தொடக்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் சென்னையை போன்று மதுரை பிரமாண்ட நூலகத்தை கட்டியது. அதன் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படவிருக்கும் கலைஞர் நூலகம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
கோவை வாழ் பொதுமக்களிடையே குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாக்கத்தை, மேலும் தூண்டும் வகையில் இந்த நூலகம் அமையவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட உள்ளது.
விண்வெளி, இயந்திரவியல், மெய்நிகர் தோற்றம், இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த கண்காட்சிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தொிவித்துள்ளது.