“அப்போதே கைது செய்திருந்தால் விஜய் வளர்ந்திருப்பாரா?” - பதவிக்காக கூட்டணி மாறவில்லை.. திமுகவுக்கு திருமாவளவன் சரமாரி கேள்வி!

அண்ணன், நான் இங்கே இருக்கிறேன் என்று நினைத்து களமாடுங்கள்..
Thirumavalavan Political Speech
Thirumavalavan Political Speech
Published on
Updated on
3 min read

தருமபுரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா, மதுராபாய் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது அரசியல் பயணம், விசிகவின் கூட்டணி நிலைப்பாடு மற்றும் திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பேசினார்.

தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில், தங்களது இயக்கத்தில் தமிழ் பெயர்களை சூட்டும் நடைமுறை தொடங்கியதாக திருமாவளவன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கோவிந்தசாமி என்பவருக்கு கோவேந்தன் என்றும், முனுசாமி என்பவருக்கு தமிழ்ச்செல்வன் என்றும் பெயர் சூட்டப்பட்டதாக கூறினார். அதேபோல், ஈழத்தில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களின் நினைவாக, ஜெயராஜ் என்ற தனது தம்பிக்கு ‘வன்னியரசு’ என பெயர் சூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரனுக்கு விசிக மீது பிடிப்பு இருந்தது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், பல்வேறு தலைவர்களுடன் பேசியிருந்தாலும், தமிழகத்தில் தனக்கு பிடித்த இயக்கம் விசிகதான் என தன்னிடம் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ‘சிறுத்தைகள் படை’ என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். பிரபாகரனை சந்தித்தபோது, தன்னை நெஞ்சோடு அணைத்து, “அண்ணன், நான் இங்கே இருக்கிறேன் என்று நினைத்து களமாடுங்கள்” என கூறியதாகவும் திருமாவளவன் நினைவுகூர்ந்தார்.

அந்த காலகட்டத்தில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறிய திருமாவளவன், தன்னுடன் இருந்தவர்களே பின்னர் அந்த விஷயங்களை மறந்துவிட்டதாக தெரிவித்தார். தன்னை நக்சலைட் என முத்திரை குத்த முயற்சி நடந்ததாகவும், தன்னுடன் தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிக்க மறுத்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “அப்போது நான் அஞ்சி பின்வாங்கியிருந்தால், 1990-லேயே இந்த இயக்கம் காணாமல் போயிருக்கும். என்னுடன் இருந்த தோழர்களை வைத்து இயக்கத்தை நடத்தினேன்” என திருமாவளவன் கூறினார்.

பதவிக்காக கூட்டணி மாறியதில்லை

தற்போது பதவி மற்றும் அரசியல் செல்வாக்குக்காக தான் கூட்டணி மாறியதாக சிலர் விமர்சிப்பதாகக் கூறிய திருமாவளவன், அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.“பதவிதான் முக்கியம் என்றால், நான் 10 ஆண்டுகள் தேர்தல் அரசியலை முன்னெடுத்திருக்க மாட்டேன்” என அவர் தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், திமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்திருந்ததாகவும், அப்போது விசிக தொண்டர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து கைது செய்ததாகவும் திருமாவளவன் கூறினார்.

கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டதாகவும், இதையடுத்து மையக் குழுவை கூட்டி தேர்தல் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். “வாக்களிக்கும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை சொல்ல வேண்டும்” என்ற நோக்கத்தில்தான் முதலில் தனித்துப் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசு பணியை ராஜினாமா செய்ததாகவும், தனது பிறந்த நாளன்றே ராஜினாமா செய்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார். பதவி ஆசை இருந்திருந்தால் அன்றே போட்டியிட்டு இருப்பேன் எனக் கூறிய அவர், சிதம்பரத்தில் முதன்முறையாக போட்டியிட்டபோது, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத தன்னை மக்கள் ஆதரித்து தோளில் தூக்கி கொண்டாடியதாக தெரிவித்தார். மூன்றாவது அணியாக போட்டியிட்டு 2.25 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவுடன் கூட்டணி

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பல்வேறு தரப்பிலிருந்து அழைப்பு வந்தபோதும், அதற்கு செல்லாமல் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்ததாக திருமாவளவன் கூறினார். அப்போது அரசியலில் காணாமல் போய்விடுவோம் என சிலர் கூறிய நிலையில், அதிமுகவுடன் செல்ல முடியாது என்றும், திமுகதான் அடுத்த வாய்ப்பு என்றும் முடிவு செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து, 2001-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்ததாகவும், இது பதவிக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் திருமாவளவன் விளக்கினார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத் தொகுதி கேட்டதாகவும், அது மறுக்கப்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, திமுக கூட்டணியில் இருந்து விலகி சிதம்பரத்தில் போட்டியிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். அப்போது மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணியில் திருமாவளவனை சேர்க்க வேண்டும் என வெளிப்படையாக பேசியதாகவும், ஒருகாலத்தில் தன்னை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என கூறியவரே பின்னர் தன்னை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2014-லும் கூட்டணிக்காக அழுத்தம் வந்தது

திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததை விமர்சித்து பல்வேறு இழிச்சொற்களை தாங்கிக்கொண்டதாக கூறிய திருமாவளவன், கூட்டணி அரசியலில் பல்வேறு கட்டங்களில் திமுக தலைமை தன்னை நேரடியாக அணுகியதாக தெரிவித்தார். 2014-ல் திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றதாகவும், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என ஸ்டாலின் தெரிவித்ததாகவும் கூறினார். 2016-ல் திமுகவை விட்டு விசிக தானாக வெளியேறவில்லை என்றும், திமுக தரப்பிலிருந்தே கூட்டணி வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 2024 தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்றதாகவும், ஆனால் கூட்டணியை உடைய விடமாட்டேன் என தான் வெளிப்படையாக கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

அப்போது ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பேசியதாகவும், “அடுத்த முதல்வர் திருமாவளவன் தான்” என பிரசாரம் செய்ய வேண்டும், கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். ஆனால், அந்த காரணத்திற்காக கூட்டணியை விட்டு வெளியே வர முடியாது என மறுத்ததாகவும், பாஜக சதி செய்து திராவிட மற்றும் பெரியார் அரசியலை வேரறுக்க முயற்சிக்கிறது என அப்போது கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். தொடர்ந்து கரூர் சம்பவத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது தான்தான் என்றும், ஆனால் திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார். “அப்போதே விஜய் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்திருந்தால், தற்போது விஜய் வளர்ந்து இருப்பாரா? அதற்கு காரணம் யார்? திமுகதானே?” என அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியில் இருந்து விசிக தானாக வெளியேறவில்லை எனக் கூறிய திருமாவளவன், இதனை விளக்குவதற்காக “ஆட்டுப்பட்டியை இடையில் ஒருவர் வந்து திறந்துவிட்டால், ஆடுகள் போகத்தான் செய்யும். அந்த ஆட்டுப்பட்டி யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?” என திமுகவை விமர்சித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு திமுகவே காரணம் எனக் கூறிய அவர், தற்போது தங்களை நியாயமானவர்களாக காட்டிக்கொள்ள திமுக முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். “கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள். அதற்கு யார் காரணம்? திராவிட இயக்கங்கள் என்ன முடிவெடுக்கின்றனவோ, அதையே நாமும் எடுப்போம் என்று அப்போதே முடிவு செய்தேன்” என திருமாவளவன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே நல்லிணக்கம் இல்லாததால் காங்கிரஸ் பிரிந்து சென்றதாகவும், அதேபோல் திமுகவுடன் தங்களுக்கு ஏற்பட்ட நல்லிணக்கமின்மை காரணமாக விசிகவும் பிரிந்து சென்றதாகவும் அவர் கூறினார்.மேலும், அடுத்ததாக அரசியலில் யார் வர வேண்டும், யாருடன் அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகத்தான் இருக்கும் என திருமாவளவன் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com