திருவெறும்பூர்.. அமைச்சர் அன்பில் மகேஷின் கோட்டையில் தவெகவின் பலப்பரீட்சை! ஆதிக்கம் செலுத்துமா திமுக?

70 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன
thiruverumbur constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொகுதியான திருவெறும்பூர், பெல் (BHEL) உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். 83 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், அமைச்சரின் செயல்பாடு மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் தேவைகளே அரசியலைத் தீர்மானிக்கின்றன.

திருவெறும்பூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.5 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக முக்குலத்தோர் 26 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். தேவேந்திர குல வேளாளர்கள் 16 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 12 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் உள்ளனர். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் தொழிலாளர் அமைப்புகளின் வாக்குகள் இங்குத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

thiruverumbur constituency

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக கடந்த 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைப் பணிகளைச் சீரமைக்க வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. அரியமங்கலம் குப்பைக்கிடங்கு பிரச்சினை, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையடையாததால் ஏற்படும் சுகாதாரச் சிக்கல்கள் மற்றும் ரயில்வே கேட் தாமதத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்றவை மக்களின் பிரதான புகார்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

திருவெறும்பூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 53.9 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 57.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 28.4 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 25.7 சதவீதமாகச் சற்றே சரிந்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 112 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 138 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 91 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 83 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 42 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, திருவெறும்பூரில் திமுக 120 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 90 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 70 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 37 சதவீத வாக்குகளைப் பெற்று மிகவும் கம்பர்ட்டபிளாக முன்னிலை வகிக்கிறது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 5 சதவீதமாக இருக்கும் என்பதால், அமைச்சர் அன்பில் மகேஷின் வெற்றி வாய்ப்பு உறுதியாகத் தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com