“ஆணவக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை” -உயர்நீதிமன்றம் வேதனை!!

தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு ....
madras high court
madras high court
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதிலும் அதிலும் குறிப்பாக சாதி ரீதியான வன்கொடுமைகளும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன, அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்த, ஐடி ஊழியர் கவினின் ஆணவப்படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிகப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த  கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இந்நிலையில், தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, மாணவரின் தந்தை எம்.முருகன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

அதில், கல்லூரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவிர்கள், அடிக்கடி தனது மகனை மிரட்டியதாகத்  தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளார். 

வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி, குள்ளஞ்சாவடி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிபிசிஐடி நியாயமாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் ஆணவக்கொலை அதிகரித்துள்ளதாக கூறிய நீதிபதி, துரதிருஷ்டவசமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆணவக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com