
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: வன்முறை:
கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறையால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
திண்டிவனதில் காவல்துறையினர் குவிப்பு:
பள்ளி கல்லூரிகளில் போராட்டம் பரவி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் போராட்டம் நடைபெற இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தவறான கருத்துக்களை பதிவிட வேண்டாம்:
ஸ்ரீமதி மரணம் குறித்தும், காவல்துறையால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் விளக்குவதுடன் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மாணவியின் சொந்த ஊரில் பலத்த பாதுகாப்பு:
உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியநெசலூரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவின்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.