
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கும்மிடிக்கான் பட்டி ஊராட்சிக்குட்பட்ட, சென்னன் வட்டம் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தன்னுடைய மகன் கோகுல கிருஷ்ணன் மற்றும் கபிலா ஸ்ரீ ஆகியோருடன் குளிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கிணற்றில் பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சீனிவாசன் திடீரென உள்ளிருந்து ஒரு முறை வெளியே வந்து மீண்டும் மூழ்கி உள்ளே சென்றுள்ளார். அதனால் நண்பர்களும், பிள்ளைகளும் சீனிவாசன் மூச்சுப்பிடித்து விளையாடுகிறார் என்று நினைத்து அமைதியாக விட்டுள்ளனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சீனிவாசன் வெளியே வராததால் பதற்றம் அடைந்த நண்பர்கள் மற்றும் சீனிவாசனின் பிள்ளைகள் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல்துறையினர் மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் நீண்ட நேரம் போராடி சீனிவாசனின் உடலை மீட்டனர்.
கந்திலி காவல்துறையினர், சீனிவாசனின் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.