“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்...” - சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய MLA சிந்து.. ரசித்து கேட்ட முதல்வர் கொடுத்த ரியாக்ஷன்!

வாகன பராமரிப்பு செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்...
Tamil Nadu Assembly sindhu MLA song
Tamil Nadu Assembly sindhu MLA song
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், (ஆகஸ்ட் 12) -ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய விசிக காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதிமணி, தனது தொகுதி சென்னையில் இருந்து சுமார் 280 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும், சட்டப்பேரவைக்கு வருவதற்கு போதிய வாகன வசதி இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், எம்.எல்.ஏ.க்களுக்கு வாகன வசதி இல்லாததால் ஏற்படும் சிரமங்களை குறிப்பிட்ட அவர், அலுவலகப் பணிகளுக்கு உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ளும் அளவிற்கும் தங்களுக்கு போதிய நிதி இல்லை எனத் தெரிவித்தார். எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகன வசதி ஏற்படுத்தித் தருவதுடன், உதவியாளர் நியமிப்பதற்கான நிதியையும் வழங்க வேண்டும் என முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ஜேடிசி பிரபாகர், முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15-ல் முதல்வர் அதிரடி அறிவிப்பு

இந்தக் கோரிக்கை வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, (ஆகஸ்ட் 15) ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வாகன ஓட்டுநர், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்பு செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல், எம்.எல்.ஏ.க்கள் தங்களது அலுவலகப் பணிகளுக்கு உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ளும் வகையில் மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இதற்காக உரிய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான அரசாணைகள் வெளியிடப்படும் என்றும் விஜய் தெரிவித்தார்.

பாடல் பாடி நன்றி சொன்ன எம்.எல்.ஏ.

முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கோரிக்கை வைத்த விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து பேசிய குடியாத்தம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சிந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாடல் பாடினார்.

“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. இவர் யாருக்காகக் கொடுத்தார்.. ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார்...” என அவர் பாடியபோது, முதல்வர் விஜய் புன்னகையுடன் அதனை ரசித்தார். கோரிக்கை வைக்கப்பட்ட மூன்றே நாட்களில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதும், அதற்கு சட்டப்பேரவையிலேயே எம்.எல்.ஏ. பாடல் பாடி நன்றி தெரிவித்ததும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com