

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக முன்னாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நீண்ட நேரம் வேளாண் பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் உடனுக்குடன் பதிலளித்தனர்.
அவ்வாறு, "கடந்த 5 ஆண்டுகால ஆட்சி, விவசாயிகள் போராட்டம் இல்லாத ஆட்சியாக இருந்தது" என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதற்கு, திமுகவை விமர்சிக்கும் வகையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார்.
"உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்துக்கொண்டே, ‘போன ஆட்சி விவசாயிகள் போராட்டம் இல்லாத ஆட்சி’ என்று சொன்னார்.
விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த அரசு திமுக. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது தெரியும். திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் கடுமையாக அடக்கப்பட்டது என்பதுதான் உண்மை.
கடந்த வாரம்கூட, விவசாயிகள் சார்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது" எனப் பேசினார் நிர்மல் குமார்.
இதற்குப் பதிலளித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "அவர் (நிர்மல் குமார்) எந்தப் போராட்டம் என்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க நிலம் எடுக்கும்போது நடந்த போராட்டம் அது.
ஆனால், விவசாயிகள் இழப்பீடுக்காகவோ, வறட்சிக்காகவோ போராட்டம் நடத்தவில்லை. எங்கள் ஆட்சியில் திடீரென மழை பெய்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். உங்கள் ஆட்சியில் மழையே பெய்யவில்லை. மழை வந்தால் நானும் சக்கரபாணியும் டெல்டா பகுதியில் களத்துக்குச் சென்று நிற்போம்" எனப் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்