
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் டிஜிபி திரிபாதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க உயரதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதேபோல், ஊரடங்கின் பயனாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்து உள்ளதாகவும் தெரிகிறது.
அதன்படி, பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்கவும், நடைப்பயிற்சிகள் மேற்கொள்ளவும் தளர்வுகள் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் எதுவும் அளிக்கக் கூடாது எனவும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.