
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிப்படைந்தது. இவற்றை தவிர நாகை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தின் காரணமாக பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணானது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை கடந்த சில நாட்களாக பார்வையிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாதிப்புகள் குறித்து அறிக்கைகளை அரசிடம் சமர்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிவாரணத்தை மத்திய அரசிடம் கோரி இன்று காலை 10.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் அவர் அளிக்க உள்ளார்.