
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு மருத்துவமனையில் 260 படுக்கைகள் கொண்டதாகவும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான புறநோயாளிகள், கர்ப்பிணிகள் என சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய தர சான்றிதழ் பெற்ற இம்மருத்துவமனை அண்மையில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் காதல் திருமணம் செய்துக்கொண்ட சிரஞ்சீவி - ஜமிலாக்கான் தம்பதி, கர்ப்பமான ஜமிலாக்கான் கர்ப்பம் தரித்த நாள் முதல் ஒசூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான ஜமிலாக்கான், பிரசவத்திற்கான நாளாக நவம்பர் 26 என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தலை பிரசவத்திற்காக 24ஆம் தேதியே கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு வயிற்றினுள் இருந்த குழந்தை உயிரிந்ததாக கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை உயிரிழந்த நிலையில் அகற்றி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனை ஊழியர், செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மருத்துவர்கள் யாரும் பரிசோதிக்காமல் முறையான சிகிச்சை வழங்காமல் இருந்ததாகவும், பலமுறை வலியுறுத்தியும் செவிலியர்களின் தொலைப்பேசி வழிக்காட்டுதல்படி தூய்மை பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர். இதுவரை எந்த மருத்துவரும் விளக்கமளிக்காமல், சம்பவ இடத்திற்கு வராதது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.