

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாகத் திருச்சி கிழக்கு உருவெடுத்துள்ளது. காரணம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இங்கு போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதே ஆகும். முழுக்க முழுக்க நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், சிறுபான்மையினரின் வாக்குகள் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் உச்சகட்ட சக்தியாக உள்ளன.
திருச்சி கிழக்கு தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆராய்ந்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 39.7 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 28.6 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 19 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாகச் செட்டியார் மற்றும் இதர சமூகத்தினர் 39 சதவீதமும், சோழிய வெள்ளாளர்கள் 23 சதவீதமும் உள்ளனர். முஸ்லிம்கள் 15 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 10 சதவீதமும் வசிக்கும் இந்தத் தொகுதியில், சிறுபான்மை வாக்குகள் எந்தப் பக்கம் சாய்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் திருச்சி விமான நிலைய இணைப்பு வசதி குறைவாக இருப்பதும், பழைய நகரப் பகுதிகளில் போதுமான பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாமையும் சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சர்வீஸ் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. குப்பை மேலாண்மை சீராக இல்லாதது மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவை திருச்சி கிழக்கு மக்களின் பிரதான புகார்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
திருச்சி கிழக்கு தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இங்கு 55 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 23.6 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 28.7 சதவீதமாகத் தனது செல்வாக்கைச் சற்றே உயர்த்தியுள்ளது. பூத் அளவில் பார்த்தால், 2021-ல் திமுக 122 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 141 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 92 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 77 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 52 பூத்கள் ஊசலாடும் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, திருச்சி கிழக்கில் திமுக 120 வாக்குச்சாவடிகளில் வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. அதிமுக 90 வாக்குச்சாவடிகளில் மட்டுமே தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 80 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் கணிப்புப்படி, 2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெறும். சுமார் 3 சதவீத வெற்றி வித்தியாசத்தில் தற்போது திமுக முன்னிலையில் இருந்தாலும், விஜய் போட்டியிட்டால் இந்த முடிவுகளில் மிகப்பெரிய மிராக்கிள் நடக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.