

தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது. இந்நிலையில் மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டு திரிஷாவிற்கு அரசியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகளியாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. இவர், 1999-ல் மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அந்த வெற்றி திரிஷாவை மாடலிங் துறைக்கும், 'ஜோடி' திரைப்படத்தில் கதாநாயகனின் தோழியாக பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறிய பாத்திரத்திற்கும் அழைத்து சென்றது. பின்னர், 2002-ல் 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் நாயகியாக உருவானார். பின்னர், அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்தார் நடிகை திரிஷா. இதுமட்டுமின்றி நடிகை திரிஷா 5 இந்திய மொழிகளிலும் நடித்து பிசியாக வலம்வரும் ஒரு நடிகை.
சமீபகாலமாக நடிகை திரிஷாவை சுற்றி பல வதந்திகள் வந்த வண்ணமே உள்ளன. அந்த வதந்திகள் எதற்குமே திரிஷா விளக்கம் கொடுத்ததில்லை. மேலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவர் வைக்கும் ஸ்டோரிக்களும், அவர் பதிவிடும் புகைப்படங்களும், அதில் அவர் குறிப்பிடும் வார்த்தைகளும் அதிக கவனத்தை பெற்றுவருகிறது. தற்போது நடிகர்களும் அரசியலுக்கு வருவது குறித்து அவர்களது நிலைப்பாட்டினை தெரிவித்து வரும் நிலையில், மதுரையில் முதன்முறையாக 'திரிஷா நற்பணி மன்றம்' தொடங்கப்பட்டு திரிஷாவிற்கு அரசியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரானது மதுரை மாநகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில், "தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில், தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷா-விற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்" என்ற வாசகத்தோடும், "எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை" என்றும் "மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்" என்ற வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மேலும், அந்த போஸ்டரில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படம், அவரது ரசிகர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.