

தவெக நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் SOP போடப்படுவதாகவும், அதை நீக்கவும் வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்குக் காரணமே திமுக கொடுத்த மிரட்டல்கள்தான் என்று அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆதவ், ரஜினிகாந்த் அவர்கள் ஒரு காலத்தில் அரசியலுக்கு வந்து, இங்குள்ள "சிஸ்டத்தை" மாற்ற வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு இருந்தார். எம்ஜிஆருக்குப் பிறகு மக்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்குள்ள ஒரு தலைவராக அவர் உருவெடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதே சமயம் திமுகவின் முக்கியக் குடும்பத்தினர் அவருக்குப் பல வழிகளில் நெருக்கடிகளையும் மிரட்டல்களையும் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த மிரட்டல்களுக்குப் பயந்துதான், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவைக் கைவிட்டுவிட்டு, கடைசியில் திமுக குடும்பத்தின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார் என்றும் அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆதவ், ரஜினிகாந்தால் முடியாத ஒன்றை, இப்போது தளபதி விஜய் துணிச்சலாகச் செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய ஆளுமையான ரஜினிகாந்தையே மிரட்டிப் பணிய வைத்த திமுகவை எதிர்த்து, விஜய் இன்று தனிக்கட்சி தொடங்கித் தைரியமாக நிற்கிறார் என்றால், அவருக்கு எவ்வளவு மனவலிமை இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினிகாந்திற்கு இல்லாத அந்த மன உறுதி விஜய்க்கு இருப்பதாகவும், எதற்கும் அஞ்சாமல் அவர் அரசியலில் தடம் பதிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டித்தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய நிலையில், ஆதவ் அர்ஜுனா கூறியுள்ள இந்த மிரட்டல் விவகாரம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. திமுக தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வரப்போகிறது என்பது ஒருபுறம் இருக்க, ரஜினி ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே இது ஒரு பெரிய விவாதத்தையே உருவாக்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.