இடைத்தேர்தலில் அரைகுறை வெற்றி?.. ஆனாலும் உள்ளாட்சி "டென்ஷன்"! தவெக தலைமை என்ன முடிவெடுக்கும்?

பாமகவின் ஆதரவைத் தவறவிட்ட அதிமுக சரிந்துள்ளது. ஆனால், திமுக வாக்காளர்கள் பெருமளவில் மீண்டும் திமுகவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
TVK : Local Body Election Challenges and Strategy
இடைத்தேர்தலில் அரைகுறை வெற்றி?.. ஆனாலும் உள்ளாட்சி "டென்ஷன்"! தவெக தலைமை என்ன முடிவெடுக்கும்?DIPR
Published on: 
Updated on: 
2 min read

மதுரையில் பேசிய நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், அமைச்சர் நிர்மல் குமார் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

மதுரையில் சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது 8 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு மதுரைக்கு ஓரளவு பொருந்தினாலும், நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்த தவெகவினரின் நம்பிக்கையில் கல்லெறிந்துள்ளன.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கிடைத்த கூட்டணி பலம், ஆளும் கட்சிக்கான செல்வாக்கு ஆகியவை வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படவில்லை.

இரண்டும் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். அதே வேட்பாளர்கள் ராஜினாமா செய்து போட்டியிட்டதால் எதிர்ப்புகள் இருந்தன. அத்தனையையும் தாண்டி, விஜய் நேரடியாகப் பரப்புரை செய்ததன் விளைவாக இரண்டிலும் வெற்றி பெற்றனர்.

ஆனால், மறுபக்கம் திமுக இரண்டு தொகுதிகளிலும் 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது.

2026 பேரவைப் பொதுத்தேர்தலுடன் இடைத்தேர்தலை ஒப்பிட்டால், மதுராந்தகத்தில் தவெக 31.32 சதவீதத்தில் இருந்து 40.24 சதவீதமாக, அதாவது 9.92 சதவீதப் புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. திமுக 30.18 சதவீதத்தில் இருந்து 29.02 சதவீதமாக, அதாவது 1.16 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது. அதிமுக 34.95 சதவீதத்தில் இருந்து 25.82 சதவீதமாக, அதாவது 9.13 சதவீதப் புள்ளிகள் சரிந்துள்ளது.

பாமகவின் ஆதரவைத் தவறவிட்ட அதிமுக சரிந்துள்ளது. ஆனால், திமுக வாக்காளர்கள் பெருமளவில் மீண்டும் திமுகவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.

தாராபுரத்தில் தவெகவின் வாக்கு சதவீதம் 23.23 சதவீதத்தில் இருந்து 37.02 சதவீதமாக, அதாவது 13.79 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது. திமுகவின் வாக்கு சதவீதம் 32.20 சதவீதத்தில் இருந்து 31.78 சதவீதமாக, அதாவது 0.42 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது. அதிமுகவின் வாக்கு சதவீதம் 40.56 சதவீதத்தில் இருந்து 25.08 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, 15.48 சதவீதப் புள்ளிகள் சரிந்துள்ளது.

இங்கும் தவெக பெருமளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது. திமுக தனது வாக்குகளைத் தக்கவைத்துள்ளது. அதிமுக வாக்குகளை இழந்தாலும், கட்சியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான வாக்குகள் மற்றும் சாதி வாக்குகளைத் தக்கவைத்துள்ளது.

இதுவரையிலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி பெற்ற மிகப் பெரிய அளவிலான வெற்றியைத் தவெக பெறவில்லை என்பதையும், எங்கும் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளைவிட அதிகமான (50 சதவீதத்துக்கும் மேலான) வாக்குகளைப் பெறவில்லை என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்கள் ஒருவிதத் தயக்கத்துடன்தான் தமிழக வெற்றிக் கழகத்தை அணுகுகின்றனர் என்று கூறுகின்றனர். இந்த நிலையில், இடைத்தேர்தல் குறித்த பேச்சுகள் எழுந்துள்ளது தவெக நிர்வாகிகளைச் சிந்திக்க வைத்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல்களில் முதலமைச்சர் விஜய்யின் முகத்துக்காகக் கிடைத்த வாக்குகள் உள்ளாட்சித் தேர்தலிலும் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் இணைந்து மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

கிராம அளவில் அல்லது வார்டு அளவில் கட்சியின் செல்வாக்கைவிடத் தனிநபரின் செல்வாக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், செல்வாக்கான நபர்கள் கட்சியில் இருப்பது அவசியம்.

தவெக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் செல்வாக்கு குறித்தே பல கேள்விகள் எழுந்துள்ளதைப் பார்த்திருக்கிறோம். கிளைக் கழக அளவில் இளைஞர்கள் செயல்பட்டு வந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் பலம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.

குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அதிமுகவினரின் செல்வாக்கை உடைக்கும் தனிநபர்கள் தவெகவில் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. இப்போது ஆளும் கட்சியாக இருப்பதால், பிற கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து இணையும் நபர்களை நம்பித் தேர்தல் களத்தில் இறங்கினாலும், மேயர் போன்ற பதவிகளை வெல்ல அது போதுமானதாக இருக்குமா என்றும் ஆளும் கட்சியினர் ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்னும் அதிக இடைத்தேர்தல்கள் நடக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களின் உள்ளூர் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் வெல்ல தவெக திட்டமிட்டு வருகிறது.

இதில் உள்ள முக்கியச் சவால், ஆரம்பம் முதல் கட்சியில் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்குச் சீட் வேண்டும் என்று கேட்கும்போது, தலைமை யாருக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பதுதான்.

மாநிலத் தலைமையில் ஏற்படுத்தியதைப் போல, உள்ளாட்சிகளிலும் தவெக மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வரை உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

TVK : Local Body Election Challenges and Strategy
வாசலில் வரவேற்ற விஜய், கேப்பச்சினோ அருந்திய ராகுல்.. இந்த சந்திப்பு ஏன் முக்கியம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com