வேட்பாளர்கள் தேர்வில்.. முதல் முறை சறுக்கியுள்ளதா தவெக? ரிப்போர்ட் கேட்டு ஆடிப்போன "மாண்புமிகு" - களமிறங்கும் முதல்வர்!

தவெக, விசிகவுடன் கூட்டணி அமைத்திருப்பது ஒரு பலம் என்றாலும், மரகதம் குமரவேலின் தனிப்பட்ட செல்வாக்கு பெருமளவில் பயனளிக்காது என்று கூறப்படுகிறது.
Maragatham Kumaravel, Vijay, Sathyabama
வேட்பாளர்கள் தேர்வில்.. முதல் முறை சறுக்கியுள்ளதா தவெக? ரிப்போர்ட் கேட்டு ஆடிப்போன "மாண்புமிகு" - களமிறங்கும் முதல்வர்!
Published on
Updated on
2 min read

தமிழகத்தை மீண்டும் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால், இதில் தவெகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர், தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் யாரும் எதிர்பாராத விதமாக 108 தொகுதிகளைக் கைப்பற்றியது தமிழக வெற்றிக் கழகம். சுமார் 34.92% வாக்குகளைப் பெற்றது.

வேட்பாளர்களுக்கு காத்திருந்த ஷாக்!

வாக்காளர்கள் மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் இந்த விஜய் அலையால் அதிர்ச்சியடைந்தனர். அதிமுகவில் இருந்து பலரும் விலகி, தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இடைத்தேர்தலில் விஜய் அலையுடன் தவெக வேட்பாளர்களாக களமிறங்கி, எளிதாக வெற்றி பெறலாம் என நினைத்திருந்த வேட்பாளர்களுக்கு களத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்திருந்த மக்கள், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் கொதித்திருந்தனர். அதே வேட்பாளர்கள் மீண்டும் வந்து, அதே பதவிக்கு வாக்கு சேகரித்ததால் ஆத்திரமடைந்துள்ளனர்.

மதுராந்தகத்தில் மங்கும் மகரதம் செல்வாக்கு

மதுராந்தகத்தைப் பொறுத்தவரையில், கடந்த முறை அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் மற்றும் பாமக சார்ந்த வாக்குகள் மீண்டும் இரட்டை இலைக்கே கிடைக்கும்.

தவெக, விசிகவுடன் கூட்டணி அமைத்திருப்பது ஒரு பலம் என்றாலும், மரகதம் குமரவேலின் தனிப்பட்ட செல்வாக்கு பெருமளவில் பயனளிக்காது என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், கடந்த முறை தவெகவுக்கு வாக்களித்த எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள், ஏற்கெனவே பதவியில் இருந்த மரகதம் குமரவேலுக்கு வாக்களிப்பார்களா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

ஏற்கெனவே அவர் 2021 முதல் 2016 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, வேலைவாய்ப்பின்மை, படாளம் சர்க்கரை ஆலை செயல்பாடு தொடர்பான பிரச்னைகள், ஈசூர்–வள்ளிபுரம் மேம்பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்கள், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகள், சாதிய மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருந்துள்ளன.

இந்தப் பிரச்னைகளைச் சரி செய்யவே மாற்றுக் கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால், அதே வேட்பாளர்தான் அந்தக் கட்சியிலும் களமிறங்குகிறார் என்பதால், மீண்டும் தவெகவுக்கு வாக்களிப்பார்களா என்பதில் சந்தேகம் உள்ளது.

தராபுரத்தில் துரத்தப்படும் சத்யபாமா

தாராபுரத்தில் கள நிலவரம் ரகசியம் இல்லை. தவெக வேட்பாளர் சத்யபாமாவை வாக்காளர்கள் விரட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. பிரசாரத்தைக் கூட முடிக்க முடியாமல் வேட்பாளர் திரும்பி வரும் சூழல் நிலவுகிறது.

ஏற்கெனவே கூறியது போல, அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அதிமுக ஆதரவாளர்கள் சத்யபாமாவுக்கு எதிராகத் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக இந்தத் தொகுதியில் புதிய, அனுபவம் இல்லாத வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், திமுக வாக்குகளும் அதிமுகவுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

தலைமையை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்

இதுவரை சொன்ன காரணங்களுடன், மேலும் சில தகவல்களையும் உள்ளடக்கிய உளவுத்துறை அறிக்கை தவெக தலைமைக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ரிப்போர்ட்டைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார் பொதுச் செயலாளர் ஆனந்த். ஏற்கெனவே தேர்தல் பணிகளைப் பார்த்துப் பார்த்துச் செய்து வந்த ஆனந்த், இப்போது முழு நேரமாக இடைத்தேர்தல் பக்கம் திரும்பியுள்ளார்.

வேட்பாளர்களை நம்பிக் களத்தில் இறங்க முடியாது என உணர்ந்து, அமைச்சர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர். வருகின்ற 25ஆம் தேதி மதுராந்தகத்திலும், 30ஆம் தேதி தாராபுரத்திலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர். அவரது வருகைக்கு முன்னரே அமைச்சர்களைக் களத்தில் இறக்கிவிட்டு, கட்சியினரைச் சுறுசுறுப்பாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தவெகவின் கடைசி அஸ்திரமாகவும், பிரம்மாஸ்திரமாகவும் முதலமைச்சரின் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ இருக்கும். ஆட்சியில் அதிருப்தி இருந்தாலும், விஜய்யின் முகத்துக்காகக் கூட்டம் வரும். விஜய்யின் பிரசாரத்துக்குப் பிறகு களம் மாறும் என்ற எதிர்பார்ப்பு தவெக முகாமில் மிகுந்துள்ளது.

Maragatham Kumaravel, Vijay, Sathyabama
எங்கு சென்றாலும் வெளியேற்றப்படும் தவெக வேட்பாளர் சத்தியபாமா? சற்றும் எதிர்பார்க்காத விஜய் - ரிசல்ட் மாறுகிறதா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com