“ஸ்டாலின் தொடரட்டும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்” - இலவச கல்வி தான் எங்கள் நோக்கம்… தஞ்சாவூரில் விஜய் பேசிய முழு உரை!

இதனைத் தேர்தலுக்காக உருவான உறவு என்று கருதிவிடாதீர்கள். இது இயற்கையாக அமைந்த ஆழமான உறவு...
“ஸ்டாலின் தொடரட்டும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்” - இலவச கல்வி தான் எங்கள் நோக்கம்… தஞ்சாவூரில் விஜய் பேசிய முழு உரை!
Published on
Updated on
5 min read

இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய விஜய் “கடந்த முறை வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசும்போது, 'தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு' என்று குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு நான் கூறியதற்குக் காரணம், தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியாகவும், உண்மையான பிரதிநிதியாகவும் நாம் மட்டுமே இருக்கிறோம் என்பதால்தான். மேலும், இந்த தேர்தல் குறித்தும் நான் பேசியிருந்தேன். 'தமிழ்நாடு எதிர் ஸ்டாலின்' - அதாவது, 'விஜய் எதிர் ஸ்டாலின்' என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றொரு கேள்வியையும் முன்வைத்திருந்தேன். இது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல்; இதனை ஏன் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமானத் தேர்தலாகச் சித்தரிக்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.

உடனே, 'விஜய் பாரதிய ஜனதா கட்சிக்காகப் பேசுகிறார்' என எனது பேச்சைத் திரித்துக் கூறத் தொடங்கிவிட்டனர். வழக்கமாக அவர்கள் ஒரு செயலைச் செய்வார்கள். நமது சிறுபான்மையினச் சகோதரர்களைத் தொடர்ந்து பயமுறுத்தி, ஏமாற்றும் வேலையைச் செய்வார்கள். ஆனால், அதனை இனிமேல் செய்ய முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர். அதனால்தான், நான் எதைப் பேசினாலும் அதனைத் திரித்துக் கூறுவதையும், தில்லுமுல்லு வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கள். சென்னையில் இருந்துகொண்டு 'டெல்லி டெல்லி' என்று கூச்சலிடுவதும், தாங்கள் செய்த ஊழல்களுக்காகச் சோதனை (Raid) நடத்தப்படும்போது டெல்லியிடம் சரணடைவதும் யாரென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

தமிழ்நாட்டைத் தற்காப்பதும், முன்னேற்றுவதும் திமுக தான் என்றும், ஸ்டாலின் அவர்களால்தான் எல்லாம் நடக்கிறது என்றும் கூறுவது இனிமேல் எடுபடாது. சிறுவர்கள் கூட இப்போது கூறத் தொடங்கிவிட்டனர்: 'ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி!' தமிழ், தமிழ்நாடு என்று பேசுபவர்கள், தற்போது மற்றுமொரு கருத்தைக் கூறுகின்றனர். அதாவது இது 'தமிழ்நாடு அணி எதிர் டெல்லி அணி' என்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டில் கூட தமிழ்நாடு அணியை டெல்லி அணியால் நெருங்க முடியாது. அவ்வாறிருக்கையில், கிரிக்கெட்டில் 'விசில்' சத்தம் ஒலிப்பது தமிழ்நாட்டின் சி.எஸ்.கே அணிக்காகத்தான்.

அதுபோலவே, வரவிருக்கும் தேர்தலிலும் விசில் சத்தம் ஒலிக்கப்போவது நமது தமிழக வெற்றிக் கழகத்திற்காகத்தான். தமிழ்நாடுதான் தவெக, தவெகதான் தமிழ்நாடு! எந்த அணியாக இருந்தாலும் அவை அனைத்தும் சிதறடிக்கப்படும். தமிழக வெற்றிக் கழகம் அவற்றை முறியடிக்கும். எனக்கும் எனது மக்களுக்கும் இடையிலான உறவில் யாராலும் குறுக்கிட முடியாது. இது தாய் - மகன், தந்தை - பிள்ளை, அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி போன்ற ஒரு குடும்ப உறவு. இதனைத் தேர்தலுக்காக உருவான உறவு என்று கருதிவிடாதீர்கள். இது இயற்கையாக அமைந்த ஆழமான உறவு.

இதனை நான் உணர்ந்திருக்கிறேன்; தமிழ்நாட்டு மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், மற்றவர்களுக்கு இது ஒரு தேர்தல்; ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு (Emotion). இது ஒரு சாதாரண உணர்வல்ல, பேராழி போன்ற வலிமையான உணர்வு. இனிவரும் காலங்களில் 'வீட்டுக்கு வீடு விஜய், தமிழ்நாட்டிற்காக விஜய்' என்பது இந்தத் தேர்தலில் நூறு சதவீதம் மெய்ப்பிக்கப்படும். நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு உறுதிமொழியை அளிக்க வேண்டும். ஊழலற்ற, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட நமது ஆட்சியை அமைப்பீர்கள் அல்லவா? உங்களைத்தான் கேட்கிறேன், நமது ஆட்சியை அமைப்பீர்கள் தானே? இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு அளிப்பீர்கள் தானே? என்னை முழுமையாக நம்புகிறீர்கள் தானே? ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது விசில் சத்தம் புயலாக ஒலிக்கும் தானே? உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ஒரு மருத்துவர் இருந்தால், நமக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போதுதான் அவரைப் பற்றி நினைப்போம். அதுபோலவே, ஏதேனும் சட்டச் சிக்கல் வரும்போதுதான் வழக்கறிஞரைத் தேடுவோம். இது மனித இயல்பு. ஆனால், அன்றாடம் நாம் உணவு உட்கொள்ளும் ஒவ்வொரு முறையும், நம்மையறியாமல் ஒருவரைப் பற்றி நினைப்போம், அவர்களுக்கு நன்றி கூறுவோம். அந்த மதிப்பிற்குரிய மனிதர்கள் வேறு யாருமல்ல; அவர்களே விவசாயிகள்! அவர்கள் தோற்றத்தில் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. இவ்வுலகத்தையும் மனிதர்களையும் படைத்தது கடவுள் என்பார்கள்; ஆனால் அந்த கடவுளுக்கே உணவளிக்கும் உயர்ந்த மனிதர்கள் நமது விவசாயிகள்.

இப்பூமியில் உயிர்கள் இருப்பதற்கும், பூக்கள் பூத்து, காய்கள் காய்த்து இப்பூமி செழிப்பதற்கும், அதனைத் தெய்வீகமாக மாற்றுவதற்கும் இயற்கையோடு இணைந்து செயல்படுபவர்கள் நமது விவசாயிகள். மறுபிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அப்படி ஒன்று இருக்குமானால் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்கவே ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி நுணுக்கமாகத் தெரியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனவே, மற்றவர்களைப் போல 'நானும் டெல்டாகாரன் தான்' என்று கூறி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால், விவசாயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாவிட்டாலும் விவசாயிகள் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன்.

நமது அரசியல் பயணம் 'பரந்தூர்' பிரச்சனையை முன்னெடுத்தே தொடங்கியது. எனவே, நமது ஆட்சி அமைந்தவுடன் தீர்க்கப்பட வேண்டிய முதன்மையான பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனைகளும் ஒன்றாக இருக்கும். முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 'அதைச் செய்தேன், இதைச் செய்தேன்' என்று பெருமைப்படும் நீங்கள், ஒரு அடிப்படைப் பிரச்சனையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. 'தண்ணீர் திவால்' (Water Bankruptcy) எனும் தலைப்பில் வெளியான அந்தச் செய்தியைப் படிக்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவிலேயே, குறிப்பாகத் தமிழ்நாட்டில் விரைவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலமே திவாலாகும் நிலை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கத் தவறியதே இதற்கு முக்கியக் காரணம். மணலையும் கனிம வளங்களையும் கொள்ளையடித்தால் வேறு என்ன நிகழும்? மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது. மணல் மாஃபியாக்களே இதற்குக் காரணம் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது. இந்த மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக இருப்பது திமுக அரசுதானே? அவர்களின் கூட்டுச் சதியில் (Dealing) உங்களுக்குப் பங்கு இல்லையா? தண்ணீர், மணல், கனிம வளம் என அனைத்தும் திவாலாகி வரும் நிலையில், உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடன் மேல் கடன் வாங்கி இந்த அரசை நிலைகுலையச் செய்துவிட்டீர்கள்.

நமது விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானபோது, 'டெல்டாகாரன்' என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்ததுண்டா? மாறாக, அவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதுதான் உங்கள் சாதனையா? பரந்தூர் மற்றும் மேல்மா பிரச்சனைகளில் உங்களின் உண்மையான நிலைப்பாடு என்ன?

ஆறுகளை இணைப்போம் என்று கூறிப் பெருமைப்படும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயில்தான் அத்திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டும். ஓட்டுக்காக மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்காதீர்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தவுடன், இதுபோன்ற முக்கியத் திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். எதனைக் கேட்டாலும் காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை என்று திசைதிருப்பாதீர்கள். நவீனத் தொழில்நுட்பங்களைப் (ROV) பயன்படுத்தி அணைகளின் உறுதித்தன்மையை ஆராய்வது வரை நான் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளேன்.

அமைதியாக இருப்பதால் எனக்கு எதுவும் தெரியாது என்று கருதிவிட வேண்டாம். வெறும் பேச்சால் எதனையும் சாதித்துவிட முடியாது. உரிய இடத்திற்குச் சென்று, சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, முறையான தீர்வைச் செயல்படுத்த வேண்டும். அடுத்து, நமது கடல் விவசாயிகளான மீனவர்களின் பிரச்சனைகள். அவர்களின் துயரங்களுக்கு வெறும் கடிதம் எழுதுவது மட்டும் தீர்வாகாது. ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பே நமது முதன்மையான நோக்கம். மீனவர்களே, கவலைப்படாதீர்கள்; அடுத்தது நமது ஆட்சிதான், உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆட்சி முடியப்போகும் நிலையில், 'அடுத்ததும் நாங்கதான்' என்று முதலமைச்சர் கூறுகிறார். அது ஒருபோதும் நடக்காது. சீனா நாட்டின் பெருஞ்சுவரை விடப் பெரிய இந்த சவாலை உங்களால் முறியடிக்க முடியாது. உங்கள் தந்தையாலேயே சாதிக்க முடியாததை உங்களால் செய்ய முடியாது. முறையான அரசியல் என்பது மக்களின் குறைகளைத் தீர்த்து அதனைச் செயல்படுத்துவதே ஆகும். வெறும் ஆறுதல் கூறுவதும், ஊழல் செய்வதும் அரசியல் அல்ல. எதிரிகள் நம்மைச் சுற்றிச் சதி செய்கிறார்கள். 'நீ இல்லையென்றால் நான், நான் இல்லையென்றால் நீ' என்று தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை (Dealing) வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். விஜய்யின் வருகை தங்களின் பிழைப்பைக் கெடுத்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஒருபுறம் சட்ட திட்டங்களைக் காட்டி முடக்க நினைப்பார்கள், மறுபுறம் பழி சுமத்துவார்கள்.

நமது 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டின்போது ஏற்பட்ட சிக்கல்களில் பலரும் குரல் கொடுத்தனர். முதலமைச்சர் அவர்கள் கூட அரைமனதாகக் குரல் கொடுத்தார். அவர்களுக்கு எனது நன்றிகள். தற்போது முதலமைச்சரின் மனநிலை மிகவும் நெருக்கடியில் இருக்கும். தவெக-வின் மக்கள் சக்தியைக் கண்டு அவர் அஞ்சுகிறார். நீங்கள் விஜய்யை முடக்க நினைக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் கோடிக்கணக்கான விஜய்களை உங்களால் முடக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே தங்களின் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

சுய விளம்பரத்திற்காக மக்களின் பணத்தைச் செலவழிப்பதை விடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி தேடுங்கள். எரிவாயு உருளை (Gas Cylinder) மானியம், கரும்புக்கான ஆதார விலை, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் என்னவானது? 'நீட்' தேர்வை ஒழிப்போம் என்று கூறி மக்களை ஏமாற்றியதுதான் உங்கள் சாதனையா? மக்களே, உங்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா அல்லது மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? உங்கள் சத்தத்தின் பொருள் எனக்குப் புரிகிறது. திமுக ஆட்சி மறைய வேண்டும், தவெக ஆட்சி மலர வேண்டும் என்பதே உங்கள் விருப்பம்.

அண்மையில் திருநெல்வேலியில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, 'ஸ்டாலின் தொடரட்டும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்' என்பதே நிதர்சனம். தமிழக வெற்றிக் கழகத்தின் சில முக்கிய இலக்குகள்: டெல்டா பகுதியில் உரத் தட்டுப்பாடு நீக்கப்பட்டு, சீரான விநியோகம் உறுதி செய்யப்படும். ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படாது.அரசு ஊழியர்கள் இல்லாத விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்விச் செலவை (பொறியியல், மருத்துவம் உட்பட) அரசே ஏற்கும்.

விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் நமது அரசு அனுமதிக்காது. நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். ஊழல் மற்றும் கமிஷன் முறைகள் முற்றிலும் ஒழிக்கப்படும். தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நியாயவிலைக் கடை அமைக்கப்படும். அதில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

நியாயவிலைக் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருட்களும் பாக்கெட் செய்யப்பட்டு வழங்கப்படும். மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து முறையான சட்டப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கல்வி, மருத்துவம், குடிநீர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கே நமது அரசு முன்னுரிமை அளிக்கும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும். வெறும் விளம்பரம் இன்றி, வெளிப்படையான வெள்ளை அறிக்கை மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இறுதியாக, அடுத்த ஆட்சியைப் பற்றிப் பேசுபவர்கள், தாங்கள் ஊழலற்றவர்கள் என்று மனசாட்சியுடன் கூற முடியுமா? ஆனால் நாம் உறுதியாகச் சொல்கிறோம், ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம். தஞ்சை மற்றும் வேலூர் மக்களே, உங்களோடு நான் இருக்கிறேன். தன்னம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்! நன்றி, வணக்கம்!" என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com