1 மணி நேர விசாரணைக்கு பின் உதயநிதி விடுவிப்பு... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!

காலை 11 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
Udhayanidhi stalin released
Published on
Updated on
1 min read

நேற்று தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற திமுக போராட்டத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல நடிகை திரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தஞ்சாவூர் காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்தியதாக பெண்கள் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், "உதயநிதியை கைது செய்துள்ளோம். அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு விசாரணை நடத்தப்பட்ட பிறகு அவர் விடுவிக்கப்படுவார்" என்று காவல்துறையும் தெரிவித்துள்ளது. பின்னர், தஞ்சாவூருக்கு செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட்ட நிலையில், வேனில் இருந்து இறங்க அவர் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துமாறு போலீசாரிடம் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

போலீசாரின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வேனில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி ஸ்டாலின் சென்றார். தஞ்சை நகரில் திமுகவினரின் போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு செல்ல முடியாத சூழலில் போலீசார் செங்கிப்பட்டிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, உதயநிதி அழைத்து வரப்பட்ட தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, காவல் நிலையம் முன்பு போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். அவர் வெளியே வந்ததும் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நோக்கி புறப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com