“உதயநிதி கைது... ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதா?” - கனிமொழி முதல் மாரிதாஸ் வரை.. தவெகவிற்கு எதிராக வலுக்கும் கண்டங்கள்!

ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட இயக்கம் திமுக. தவெக அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்...
udhayanidhi controversy issue
udhayanidhi controversy issue
Published on
Updated on
3 min read

தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை திரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. எனவே தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்  எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. உதயநிதி கைது நடவடிக்கைக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும், இது “அத்துமீறல்” என்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் தற்போது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 

திமுக இளைஞரணி கண்டனம் 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக உதயநிதி முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாமல், அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. உதயநிதி யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் காவிரி விவகாரம் குறித்து பேசியதை, ஆபாசமாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசியதாக திரித்து கூறுவதாக திமுக விமர்சித்துள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் உதயநிதி எழுப்ப உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அச்சத்திலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. “கைது நடவடிக்கைகளால் உதயநிதி ஸ்டாலினையோ, திமுகவையோ முடக்க முடியாது. ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட இயக்கம் திமுக. தவெக அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்” என திமுக தெரிவித்துள்ளது.

கனிமொழி கண்டனம் 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால் அரசு வழக்குத் தொடரட்டும்; நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியான திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல், இதுபோன்ற அடக்குமுறைகளில் தமிழக வெற்றிக் கழக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் கனிமொழி விமர்சித்துள்ளார். நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கிலேயே உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது அப்பட்டமான கோழைத்தனம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு தேமுதிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது. அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார். அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்து தெரிவிப்பது என்பது அடிப்படை ஜனநாயக உரிமை என்றும், கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பு என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கையே தீர்வாக கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்புடையதல்ல என்றும், கருத்துக்களை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது பொதுமக்களிடையே அதிருப்தியையும், ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக தெரிவித்து வரும் நிலையில், அதேபோல் எதிர்க்கட்சியினரும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார். அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் மற்றும் அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நடவடிக்கை ஆகிய இரண்டும் கண்டிக்கத்தக்கவை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய விதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்ணியமற்ற பேச்சு என்றும், துணை முதலமைச்சர் மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நண்பகல் 12 மணி வரை கைது நடவடிக்கையைத் தவிர்க்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையிலும், நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலிலும் எதிர்க்கட்சித் தலைவரை அவசரமாக கைது செய்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசு மற்றும் காவல்துறை காட்டியிருப்பதன் பின்னணியில் அரசியல் மட்டுமே இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் உள்ள நிலையில், அவற்றில் கவனம் செலுத்துவதே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியப் பொறுப்பு என்றும், இனியாவது இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்கம் தென்னரசு கண்டனம் 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என்றும், அரசியல் பழிவாங்கும் போக்கை வெளிப்படுத்துவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவிப்போர் மீது வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது ஆட்சியின் பலத்தை காட்டுவதல்ல; மாறாக, ஆட்சியாளர்களின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வது ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் முற்றிலும் எதிரானது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது ஒரு தலைவருக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்” என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

மாரிதாஸ் கண்டனம் 

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “இதே கைது நடவடிக்கையை மற்ற பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டபோதும் விஜய் அரசு மேற்கொண்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை சரியானது அல்ல என்றும், “இது திரிஷாவுக்காக நடத்தப்படும் கைது தான்; வேறு இல்லை” என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மூலம் “திரிஷாவைப் பற்றி யாராவது பேசினால் இதுதான் நடக்கும்” என்ற எச்சரிக்கையை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் அதிகாரத் திமிருடன் அரசு செயல்படுவதாகவும் மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உதயநிதி கைது விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், மாரிதாஸின் இந்த விமர்சனமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஐடி விங்க்கண்டனம் 

“நாடகம் ஒன்று நடக்குதம்மா… உச்சக்காட்சி தான் உதயநிதி கைதம்மா… எல்லாமே காவிரித் தாயை மறக்கத்தானம்மா!” எனக் குறிப்பிட்டு, உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விமர்சித்துள்ளது.

காவிரி நீர் பிரச்சினையை மையமாக வைத்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அதிமுக IT Wing தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com