

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, மாநகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்த உத்தரவிட்டு, தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் சென்னையில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அல்லது சிவானந்தா சாலை போன்ற பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாகவும், தன்னுடைய மனுவை பரீசிலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி, உழைப்போர் உரிமை இயக்கத்தின் பொருளாளர் மோகன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும், மற்றவர்கள் போராட அனுமதி கேட்ககூடும் என்பதால் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார்
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தீபிகா ஆஜராகி, அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் யூனியன் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதிதாக மனு அளிக்க மனுதாரர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அம்பத்தூரில் உள்ள யூனியன் அலுவலம் இருக்கும் இடம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இடமா?இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.