மதிமுக -விலிருந்து மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கினார் வைகோ!!

மல்லை சத்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டதாகவும் 15 நாள்களுக்குள் ...
vaiko vs mallai sathya
vaiko vs mallai sathya
Published on
Updated on
2 min read

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 20 -தேதி நடைபெற்ற மதிமுக உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில்,  வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது.   கட்சி பணியே செய்யாத ஒருவருக்கு கட்சி பதவி கொடுத்தது மதிமுக தலைவர்கள் மற்றும்  தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பலர் விலகினர். அத்துடன், மதிமுக தொடங்கியது முதல் உடன்  இருக்கும் மல்லை சத்யா புறக்கணிக்கப்பட்டு வைகோவின் மகன் என்ற காரணத்திற்காக பதவி வழங்கபட்டதாக பல பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

அதன் நீட்சியாக வைகோ - துரை வைகோ பிரச்சினை உருவெடுத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.“அப்போது துரை வைகோ கட்சியை விட்டே விலக உள்ளதாக’ அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்னையில்தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். 

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வைகோ, ” மல்லை சத்யாவை உடன் பிறவாத தம்பியாகத் தான் நினைத்தேன். என்னைப் பற்றி மிக மோசமாக, பேசக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார். கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது. அது உண்மையும் இல்லை” என்று பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து வைகோ குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லை சத்யா, “வைகோ சொன்ன வர்த்தையைத் தாங்கி கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். துரோகம் செய்தேன் என்று கூறியதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுத்திருக்கலாம், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக கொள்கையையே மாற்றிக்கொண்டு விட்டார். கட்சித் தலைமையை மகனுக்கு  வழங்குவதற்குத் தயாராகி விட்டார்" என பேசியிருக்கிறார்.

பின்னணி 

மதிமுக -க்கு என்று அறக்கட்டளை சார்பில் ஒரு ரூ.5000 கோடி சொத்து இருக்கிறது. அந்த சொத்து தனக்கு பின்னால் தன் வாரிசுகளுக்கு தான் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் வைகோ இவ்வாறு செய்கிறார். இது ஒரு வெளிப்படையான வாரிசு அரசியல். அவர் எதை எதிர்த்து கட்சி துவங்கினாரோ இன்று அதையே தான் அவரும் செய்கிறார். மேலும் திமுக தலைமையிடம் சென்று எந்த காரணத்தைக்கொண்டும் மல்லை சத்யாவை திமுக -வில் சேர்க்க கூடாது, என்றும் கேட்டுக்கொண்டு வந்துள்ளார் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்  மக்கள் மன்றத்தில் நீதிகேட்டு கடந்த ஆகஸ்ட் -2 உண்ணா நிலை அறப்போராட்டத்தை மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா சென்னை தீவுத்திடல் அருகே சிவானந்தா சாலையில் நடத்தினார்.

அன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா "தனது மகன் வருகைக்கு முன்பாக 28 ஆண்டுகாலம் ஜனநாயகவாதியாக இருந்தார் வைகோ... மகன் வருகைக்குப் பின்னால் மறுமலர்ச்சி விலகி மகன் திமுகவாக மாறி இருக்கிறது மதிமுக" என்றெல்லாம் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.  மல்லை சத்யா  கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டதாகவும்  15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்க வேண்டும் எனவும்  வைகோ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com