கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்த வருடம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இந்த பெருமையான விருதை கொடுக்கக்கூடாது என கேரள திரைஉலகத்தினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகை பார்வதியும் 'பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது' எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து வந்த எதிர்ப்பால் கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் சர்ச்சையால் அவருக்கு வழங்கப்படவிருந்த ஓ.என்.வி குறுப் விருது நிறுத்தி வைத்து அதைப் பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓ.என்.வி பண்பாட்டு குழு அறிவித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, சர்ச்சைகள் காரணமாக எனக்கு வழங்கப்பட்ட ஓ.என்.வி குறுப் விருதை திரும்ப அளிப்பதாகவும், மேலும் அந்த பரிசுத்தொகையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாகவும் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து வைரமுத்துவுக்கு இன்னும் கொடுக்காத விருதை அவர் எப்படி திரும்ப கொடுக்கமுடியும் என்றும் கேள்வி எழுந்தது.
இது குறித்து கருத்து கூறியுள்ள ஓ.என்.வி பண்பாட்டு குழு நாங்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு அந்த விருதை இன்னும் வழங்கவேயில்லை என்றும், வழங்காத விருதை அவர் எப்படி திரும்ப கொடுக்கமுடியும்? என்று கூறியுள்ளனர்.