“தவெக நடத்தும் கூட்டத்தில் விசிக பங்கேற்கும்” - திருமாவளவன்! 5 ஆண்டு ஆட்சிக்கு துணை நிற்போம் என நம்பிக்கை

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை என்றும் கூறினார்.
Thirumavalavan
Published on
Updated on
2 min read

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக அரசியல், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா, கூட்டணி நிலை, மற்றும் அமைச்சர் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

தவெக ஆட்சி தொடராது என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “அந்த கருத்தை அவர் எந்த கோணத்தில் கூறினார் என்பது தெரியவில்லை” என்றார். தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து கட்சிகளும் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இந்த ஆட்சி முழு ஐந்தாண்டு காலமும் நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இருப்பதாக தெரிவித்தார்.

காங்கிரஸ், கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தல் வரை தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும், இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், எந்தவித இடையூறும் இல்லாமல் இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். நாளை நடைபெற உள்ள தவெக தோழமை கட்சிகள் கூட்டம் குறித்து கேட்டபோது, அங்கு புதிய கூட்டணி குறித்து ஏதேனும் அறிவிக்கப்படுமா என்பது கூட்டத்தில் பேசப்பட்ட பிறகே தெரியவரும் என்றார். தேநீர் விருந்துக்காகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது கூட்டணிக் கட்சிகளை நம்பாததன் வெளிப்பாடா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யூகங்களின் அடிப்படையில் விவாதிப்பதை விட, அதிமுக கட்சிக்குள் என்ன பிரச்சனை நடைபெறுகிறது என்பதை ஆராய வேண்டும் என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதிமுகவிற்குள் என்ன உட்கட்சி முரண்பாடுகள் இருக்கின்றன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார். இதுவரை ஆறு எம்எல்ஏக்கள் பதவி விலகியிருப்பது அதிமுகவில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சனையாகும். இதுகுறித்து அதிமுக தலைவர்களிடமே நேரடியாக கேள்வி எழுப்பி, அவர்கள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாக தெரிவித்த அவர், முன்னதாக மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்து வெளியானபோது கடுமையான எதிர்ப்பு எழுந்ததை நினைவுகூர்ந்தார். அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்குவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது அவரது பேச்சின் மூலம் தெரிகிறது என்றும், அந்த அணுகுமுறை தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும், ஆதாரமின்றி யார் மீதும் கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை என்றும் கூறினார். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்பட்டு, கிராமங்கள் வரை பரவி வருவதாகவும், இது எந்தக் கட்சியுடன் தொடர்புடையது என்பது குறித்து விவாதிப்பதை விட, இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்துவதே முக்கிய சவால் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறை மாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதுகுறித்து தனக்கு தகவல் இல்லை என்று திருமாவளவன் பதிலளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com