

கரூர் வேலுச்சாமி புரத்தில் செப் 27 அன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடந்த பரப்புரையின் போது வழக்கத்திற்கு மாறாக விஜயை பார்க்க அதிக மக்கள் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், 41 பேர் மூச்சுத்திணறியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். இந்த சம்பவ தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் இது குறித்து காணொளி மூலம் தனது வருத்தத்தை தெரிவித்திருந்த தவெக தலைவர் விஜய்.
அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்து ஒவ்வொரு குடும்பத்தையும் கரூருக்கு நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கரூருக்கு செல்லமுடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்தித்து வருகிறார். இதற்கு நேற்று காலை முதலே தவெக தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களை தங்களது சொந்த வாகனகளில் அழைத்து வந்து கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் அரங்கில் தங்க வைத்திருந்தனர். பின்னர் சொகுசு பேருந்துகள் மூலம் நேற்று இரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாமல்லபுரம் அழைத்துவரப்பட்டனர். அப்போது ஒவ்வொரு குடும்பங்களையும் தனிமையில் சந்தித்த விஜய் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
ஏன் தனிமையில் சந்தித்தார்!??
விஜய் -ன் இந்த செயல்பாடுகள் குறித்து, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாண்டே கூறுகையில், “விஜய் தனிமையில் சந்தித்தது ஒருவிதத்தில் நல்லதுதான். அவர் நினைத்திருந்தால், ஊடகங்களுக்கு அனுமதி அளித்திருக்கலாம், ஆனால் ஏற்கனவே அவர் இந்த துயரச்சம்பவத்திற்கு பிறகு பேசி வெளியிட்ட 3 நிமிட வீடியோ அவருக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்ததை, நாம் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பமாக சந்திக்கும்போது அது இன்னும் எமோஷனலான ஒரு இடத்தை உருவாக்கலாம், காலில் விழுந்து எல்லாம் அழுததாக சொல்கின்றனர். ஆனால் இது கடும் விமர்சனத்துக்குள்ளாக கூட வாய்ப்பிருக்கு. அதனால் அது ஒருவிதத்தில் அவருக்கு நல்லதுதான்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் “பாதிக்கப்பட்ட மக்கள் அவர் மீது கோவமாக இருப்பதாக சில செய்திகள் பரப்பப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை. பாதிக்கப்பட்ட 38 குடும்பங்களுக்கும் உள்ளளவு சோகம் இருந்தாலும் அவர்களுக்கு விஜய் மீது வெறுப்பு தோன்றவில்லை.
ஆக்டிவ் மோடில் விஜய்
இனி அரசியலில் எந்த மாதிரியான நகர்வுகளை முன்னெடுக்க வாய்ப்பிருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த பாண்டே, “அவர் இந்த கரூர் சம்பவத்திற்கு பிறகு, அவர் இப்போதுதான் மீண்டும் ஆக்டிவ் ஆன அரசியலுக்குள் நுழைய உள்ளார் . அவருக்கு இருக்கும் பிரகாசமான பயன் தரக்கூடிய ஒரு வழி என்னவென்றால், அதிமுக கூட்டணியில் போய் இணைவது தான்.
எனக்கு வந்த தரவுகளின்படி பாஜக கூட்டணியுடன் இணைவதற்கு முன்னரே விஜய் உடன் கூட்டணி வைக்கத்தான் எடப்பாடி ஆசைப்பட்டார், ஆனால் விஜய் தரப்பில் இருந்து 113 சீட் வேண்டும், முதல்வர் வேட்பாளர் யார் என வெளியிடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பாஜக எவ்வளவோ பரவாயில்லை என அந்த பக்கம் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பிறகு விஜய் டிமாண்ட் எல்லாம் செய்ய முடியாது. அவர் அதிமுக -பாஜக கூட்டணியில் இருந்தால் திமுக நிச்சயம் வீழும், அதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வலிமையான எம்.எல்.ஏ -க்கள் கிடைக்கக்கூடும். 2026 இல்லை என்றாலும் வருங்காலங்களில் வலுவான ஆட்சி அமைக்க முடியும். மேலும், 2011 -ல் தேமுதிக அடைந்த வெற்றியை இவர்களால் சுவைக்க கூடும்.” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.