
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் , கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் விசிக சார்பில் வழங்கப்படும் என்றும் உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை விசிக தலைமை அலுவலகத்தில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உண்மை அறியும் குழு உயிர் இழந்தவருக்கு வருத்தத்தையும் வேதனையையும் தெரிவிப்பதை விட திமுக மீது குற்றம் சாட்டுவது அவர்களின் நோக்கமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் அணுகுமுறை என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராட்டக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது என்றார். பாஜக ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் இந்த கரூர் விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்றும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட இதை வைத்து அரசியல் செய்கிறாரே தவிர அங்கு நடந்த உண்மை நிலை பற்றி மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் அவர் செயல்பாடு இல்லை என்றும் குற்றம் சாட்டினார் .
ஆளுநரின் சமீபத்திய கூற்று வழக்கமான ஒன்றுதான் என்றும் நீதிமன்றமே அவரை கண்டிக்கும் அளவிற்கு அதிகார வரம்புகளை மீறி செயல்படுகிறார் என்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்’ என்றும் கூறினார். ஆளுநர் இனிமேலாவது இது போன்ற அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். விஜய்யோடு பாஜக கூட்டணி வைக்காது என்பது எனது நம்பிக்கை என்று கூறினார் ஆனால் விஜய்யை கருவியாக பயன்படுத்தி திமுக மற்றும் திமுக தலைவனான கூட்டணியை கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வது அவருடைய நோக்கம் என்றும் குறிப்பாக இஸ்லாமியர் கிறிஸ்தவர் உள்ளிட்ட வாக்குகளை சிதறிக்க வேண்டும் என்ற வகையில் விஜய் பயன்படுத்தினார் என்று பாஜக நம்புகிறது என்றார். இதன் அடிப்படையில் தான் பாஜக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது என்றும் வலிந்து விஜய்க்கு ஆதரவு தருகிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , விஜய் சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் பாஜக -வினர் விட மாட்டார்கள் என்றார். பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காரணத்தால் தங்களது பிரதிநிதிகளை வெவ்வேறு முகமூடி அணிந்து களம் இறக்குகிறார்கள் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமியின் ரோடு ஷோவிற்கு தடை விதித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் , இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் தடை விதிக்க தான் செய்வார்கள் என்றும் நாம் ஒரு கட்சி நடத்துகிறோம் அதற்கான பொறுப்பு நமக்கு இருக்க வேண்டும் என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.