
2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என தமிழக வெற்றி கழகம் நல்ல ஒரு பப்ளிசிட்டி யோடே களம் காண உள்ளது.
விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.
அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முழுமூச்சாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் விஜய், தவெக சார்பில் மதுரையில் மிகப்பெரிய 2 -வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொள்ள இருப்பதால், 5 ஏக்கர் அளவுக்கு கோட்டை வடிவில் மேடை அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன, இந்த வேலைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்பார்வை செய்து வருகிறார்.
விஜய் கட்சித் தொடங்கியதில் இருந்தே இதுவரை எந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளருடன் விஜய் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறார். அந்த கலந்துரையாடலின் போது “எதிர்மறையான விமர்சனத்தைக் கண்டு நான் கலங்குவது இல்லை. மாற்றத்தை நோக்கியே எனது பயணம் இருக்கிறது.
அதிமுக - பாஜக உடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை. எந்தக் காரணத்தை கொண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அதேபோல் முதல்வர் வேட்பாளர் நான் தான் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்ததை போல் என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், ஏற்றுக் கொள்வோம். தவெகவின் ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது மட்டும்தான்” என பேசியுள்ளார்.
இதன்மூலம் தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது, தவிர தவெக யாருடனாவது கூட்டணி வைத்தால் அந்த கட்சியின் நல்லவை கெட்டவைகளை “கறை படியாத” கரங்களுக்கு சொந்தக்காரரான விஜய் சுமக்க வேண்டி வரும் என்பதால் அவரின் தொணடர்களும் அவர் தனித்து போட்டியிடுவதையே விரும்புவதாக சொல்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்