

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி, தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் வேட்பாளர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
லியோனி பேசுகையில், "விஜய் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அவரது பிரச்சாரத்தைப் பார்த்தாலே அது நன்றாகத் தெரிகிறது. ஒரு இடத்தில் ஒன்று பேசுகிறார், மற்றொரு இடத்தில் வேறு ஒன்று பேசுகிறார். திடீரென்று மேடையில் நின்று கொண்டு, நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வந்துவிட்டேன் என்று கூறி அழுகிறார். அரசியலில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது" என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், மற்றொரு தவெக வேட்பாளர் ஒருவர் தனது தாய் இறந்ததைக் கூறி ஓட்டு கேட்பதை, தேர்வு எழுத வந்த மாணவன் தனது தாய் இறந்துவிட்டதால் தனக்கு மதிப்பெண் போடுமாறு ஆசிரியரிடம் கெஞ்சுவதற்கு ஒப்பானது என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தவெகவில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பின்னணி குறித்தும் லியோனி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். அக்கட்சியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட நபர்களை வைத்துக்கொண்டு மக்களிடம் எப்படி ஓட்டு கேட்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. விஜய்யை நம்பி பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைக்க நினைத்தது, மணல் திரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் லியோனி விட்டுவைக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தற்போது பேசுவதற்கு எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக நிற்கிறார் என்று அவர் விமர்சித்தார். தனது ஆட்சிக் காலத்தில் செய்த திட்டங்களைச் சொல்லி ஓட்டு கேட்கத் துணிவில்லாததால், முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி அவதூறு பரப்புவதையே வேலையாகக் கொண்டுள்ளார் என்று அவர் கூறினார். பொய்களையும், போலி ஆடியோக்களையும் வைத்து தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்து வருவதாகவும், இதற்கான பலனை அவர் விரைவில் அனுபவிப்பார் என்றும் லியோனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.