

திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விமர்சிக்கும் யாவரும் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது வழக்கம். “விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்யும் கட்சி திமுக” என மேடைக்கு மேடை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் பேசியது இந்த ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில்தான். 2ஜி வழக்கு வந்த பிறகு, “காற்றில் ஊழல் செய்யும் கட்சி” என்ற கோஷம் இதையும் விஞ்சியது.
முதலமைச்சர் விஜய் இன்று மீண்டும் திமுகவை விமர்சிக்க சர்க்காரியா கமிஷனை கையில் எடுத்தார்.
“1970-களில் சத்யநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வீராணம் திட்டத்திற்கான குழாய்கள் தயாரிக்கும் டெண்டர் வேண்டும் என்றால், 2.5 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கலைஞரின் மருமகன் மாறன் கேட்டதாக கமிஷனின் அறிக்கை கூறுகிறது. அந்த டெண்டர் ரூ.16 கோடிக்கும் அதிகம். அப்படியானால், ரூ.40 லட்சம் கமிஷனாகக் கேட்டுள்ளனர்” எனப் பேசினார் அவர்.
முதலமைச்சர் விஜய் ஏதோ பழைய வழக்கைப் பற்றி பேசவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், திமுகவை பலவீனமாக வைத்திருக்கும் இடத்தில் குறிவைத்து அடித்திருக்கிறார். விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறியுள்ள வேதாளம் போல, திமுகவின் முதுகில் ஏறியுள்ள இந்த சர்க்காரியா கமிஷன் என்பது என்ன? இதன் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.
1916-ம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் பிறந்து, தற்போது பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் லாகூர் சட்டக் கல்லூரியில் படித்தவர் ரஞ்சித் சிங் சர்க்காரியா. 1973-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், இன்றளவும் இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக இருக்கும் இரண்டு ஆணையங்களுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்.
சர்க்காரியா ஆணைக்குழு (தமிழ்நாடு - 1976)
மத்திய-மாநில உறவுகள் ஆணைக்குழு (1983)
இதில் முதலாவதான சர்க்காரியா ஆணைக்குழுவின் அறிக்கைதான் இன்று முதலமைச்சர் விஜய்யின் பேச்சின் சாரம்.
முதன்முதலாக திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை, திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். எழுப்பினார்.
இந்த நிலையில், 1972-ல் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர்., 32 புகார்கள் அடங்கிய பட்டியலை எடுத்துக்கொண்டு, அப்போதைய ஆளுநர் கே.கே. ஷாவிடம் ஊர்வலமாகச் சென்று கொடுத்தார்.
இந்தப் புகார் பட்டியலை அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்போவதாக ஆளுநர் தெரிவிக்க, புகார் பட்டியலை எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார் எம்.ஜி.ஆர்.
அதிமுகவைத் தொடங்கிய பிறகு, குடியரசுத் தலைவர் வி.வி. கிரியை 1972, நவம்பர் 5-ம் தேதி சந்தித்து, கருணாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுப் புகார் கொடுத்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பதில் அளித்த நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறு புத்தகமாகவும் வெளியிட்டார்.
அதன் பின்னர், அந்தப் புகாரைக் கிடப்பில் போட்டது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு.
1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். அதனைத் தீவிரமாக எதிர்த்த மாநில அரசுகளில் ஒன்று, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு.
அவசரநிலைக்கு எதிரான தீர்மானங்கள் இயற்றப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் புகலிடம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் கே.கே. ஷா, மாநிலத்தில் அரசியலமைப்பின்படி ஆட்சி நடைபெறவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் கூறி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். மாநில சுயாட்சி என்ற பெயரில் பிரிவினை தூண்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
அதே நேரத்தில், திமுக அரசின் ஊழல்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது.
அதைத் தொடர்ந்து, திமுக அரசு 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ல் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் கலைக்கப்பட்டது.
அடுத்த மாதமே, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆர். குடியரசுத் தலைவரிடம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த, சர்க்காரியா கமிஷன் என்ற ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
விஜய் பேசிய வீராணம் ஏரி மட்டுமல்லாமல், வான்வழி மருந்து தெளித்தல் ஒப்பந்தம், சர்க்கரை ஆலை ஊழல், சமயநல்லூர் மின் நிலையம் விற்பனை, முரசொலி கட்டிடம் மற்றும் கட்சி நிதி, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் நெல் கொள்முதல் என 28 குற்றச்சாட்டுகள் குறித்து சர்க்காரியா ஆணையம் விசாரணை நடத்தியது.
அதில், 7 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகவும், பிற குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் கூறி, சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான், “விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்யும் கட்சி திமுக” எனப் பேசிவந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அந்த அறிக்கையில் ‘விஞ்ஞான ஊழல்’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி, 1977-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நீதிமன்ற விசாரணையின்போது, திமுக மீதான புகார்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், சேலம் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் இந்தப் புகாரை எழுப்பியதாகவும் எம்.ஜி.ஆர். அளித்த அறிக்கை, அந்தக் காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, அரசியலில் கூட்டணி கணக்குகள் மாறின. 1980-ம் ஆண்டு திமுக-இந்திரா காங்கிரஸ் கூட்டணி, தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் வெற்றி பெற்றது.
குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களையோ அல்லது உறுதியான சாட்சியங்களையோ சிபிஐயால் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியவில்லை. இதனால், ஊழல் வழக்குகள் ஒவ்வொன்றாகக் கைவிடப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்பின்னர், 1984-ம் ஆண்டு அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சியில் இருந்த சூழலில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தொடரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சர்க்காரியா ஆணையத்தின் குற்றச்சாட்டுகள் தற்போது வரை நிரூபிக்கப்படாத வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு அரசியலில் எப்போதும் தண்டனை பெற்றுத்தரும் குற்றங்களாக அல்லாமல், அரசியலில் தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு சர்க்காரியா கமிஷன் ஒரு உதாரணம்.
விஜய்யின் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மிசா பற்றி பேச இவருக்கு (விஜய்) தகுதி இருக்கா? சர்க்காரியா கமிஷன் என்றால் என்னவென்று இவருக்குத் தெரியுமா? யாரோ எழுதி கொடுத்ததை 3 நாட்கள் மனப்பாடம் செய்து படித்துவிட்டு வந்து வாந்தி எடுத்திருக்கிறார். சர்க்காரியா கமிஷனில் எந்தத் தவறும் நடக்கவில்லை என அந்த கமிஷனே ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. சர்க்காரியா கமிஷனில் எந்த ஆதாரமும் கிடையாது, எல்லாம் குற்றச்சாட்டுகள்தான்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் சொன்னபடி, அந்தக் கமிஷனே “எந்தத் தவறும் நடக்கவில்லை” என அறிக்கை கொடுக்கவில்லை. சர்க்காரியா ஆணையம் விசாரித்த 28 குற்றச்சாட்டுகளில், 7 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அவற்றில் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதாக நாடாளுமன்றப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படாததால் வழக்குகள் பலவீனமடைந்தன என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வழக்குகளின் பின்னணி மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அவற்றின் முடிவுகள் குறித்தும் பல்வேறு அரசியல் விமர்சனங்கள் இருப்பதே இன்றளவும் இது பேசப்பட காரணமாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்