“அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய்” - வீடு தேடி சென்று செய்த மரியாதை.. உற்று நோக்க வேண்டிய புதிய அரசியல் நகர்வு!

உணர்ச்சி சார்ந்த அரசியல் கேள்விகளில் தனது நிலைப்பாட்டை சமநிலைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது...
vijay with senior political leader
vijay with senior political leader
Published on
Updated on
2 min read

தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிகாரத்தை கைப்பற்றுவது ஒரு கட்டம் என்றால், அந்த அதிகாரத்தை நிலைநிறுத்த அரசியல் உறவுகளை கட்டமைப்பது இன்னொரு முக்கிய கட்டம். அந்த இரண்டாவது கட்டத்திற்குள் தற்போது மிகத் திட்டமிட்ட வகையில் நுழைந்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். முன்னாள் முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்களை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்ததன் மூலம் ஆரம்பித்த இந்த அரசியல் மரியாதை பயணம், தற்போது வைகோ, அன்புமணி, சீமான் போன்ற வெவ்வேறு அரசியல் துருவங்களில் இருக்கும் தலைவர்களை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது.

இது சாதாரண மரியாதை சந்திப்புகளின் தொடர் அல்ல. மாறாக, “எதிர்ப்பை விட இணைப்பை முன்னிறுத்தும் அரசியல்” என்ற புதிய அணுகுமுறையின் ஆரம்ப சிக்னல். என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் கடந்த பல ஆண்டுகளாக இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளைச் சுற்றியே இயங்கியது. ஆனால் சமீபத்திய தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள சோர்வு, மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு, மற்றும் கூட்டணி அரசியலின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தின.

அந்த இடைவெளிக்குள் நுழைந்த விஜய், வெறும் வெற்றியாளர் போல் நடக்காமல் “அனைவரையும் கேட்கும் முதல்வர்” என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். வைகோவை சந்தித்தது தமிழர் உரிமை, மாநில சுயாட்சி, மொழி அரசியல் போன்ற உணர்ச்சி சார்ந்த அரசியல் கேள்விகளில் தனது நிலைப்பாட்டை சமநிலைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வைகோ இன்னும் தமிழக அரசியலில் கருத்தியல் அரசியலின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். அவரை நேரில் சந்தித்ததன் மூலம் பழைய திராவிட மற்றும் தமிழ் தேசிய அரசியலுக்கு விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

அதேபோல் அன்புமணியை சந்தித்தது மிகவும் கணக்கிட்ட அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல், கிராமப்புற வன்னியர் வாக்கு வங்கி இவை அனைத்திலும் அன்புமணிக்கு தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு உள்ளது. குறிப்பாக வட தமிழக அரசியலில் பாமக இன்னும் ஒரு தீர்மானிக்கும் சக்தி. எதிர்கால நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை மனதில் வைத்து விஜய் இந்த உறவை மென்மையாக வைத்திருக்க விரும்புகிறார் என்றே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆனால் அதிக கவனத்தை ஈர்த்தது சீமானை சந்தித்த தருணம். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர் அரசியலில் உருவான கோபம், தமிழ் தேசிய உணர்வு, அமைப்பு எதிர்ப்பு மனநிலை ஆகியவற்றின் குரலாக சீமான் தன்னை நிலைநிறுத்தி இருந்தார். அவரை சந்தித்ததன் மூலம் விஜய் இரண்டு விஷயங்களைச் செய்துள்ளார் ஒன்று, தன்னுடைய இளைஞர் ஆதரவை உறுதிப்படுத்தினார். இரண்டாவது, “நாம் தமிழர் வாக்குகளை எதிரியாக அல்ல, உரையாடலுக்கு உரிய அரசியல் சக்தியாக பார்க்கிறோம்” என்ற மறைமுகச் செய்தியை தெரிவித்திருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com