
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை நாம் யாரும் பார்க்காத மாபெரும் தேர்தலாக இது அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது வரை களத்தில் நான்கு முனை போட்டி தான் நிலவுகிறது.
இன்றைய அரசியல் களத்தில் புது வரவு என்றால் அது விஜய் -ன் தமிழக வெற்றி கழகம் தான். தவெக இதுவரை 2 அரசியல் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. கடைசியாக மதுரை மாநாட்டில் பேசும்போது கூட ‘நான் மக்களை விரைவில் சந்திக்க உள்ளேன்’ என விஜய் பேசியிருந்தார்.
அதன்படியே வருகிற 13 -ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 20 வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க உள்ளார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பிரச்சாரத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால் விஜய் -ன் பிரச்சாரத்திற்கு காவல்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி விஜய் தங்குவதற்கு கூட திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகளில் அறை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
விஜய் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், கூட்டம் கூடும் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், விஜய் உண்மையில் மற்ற பிரதான கட்சிகளுக்கு ஒரு அச்சுறுத்தல்தான். அவர் 2026 -தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்பாரா? என்றால் அது மிகப்பெரும் கேள்வி தான். ஆனால் அவர் பல முக்கிய கட்சிகளின் ஓட்டை உடைப்பார். அதிமுக தற்போது ஒற்றுமையாக இல்லை. அதிமுக -விலிருந்து உடையும் ஓட்டுக்கள் நிச்சயம் திமுக -விற்கு செல்லாது, ஏனெனில் அதிமுக வாக்குகள் திமுக எதிர்ப்பு வாக்குகள். ஆனால் விசிக, நாதக, பாமக, சிறும்பான்மையினர், தலித் வாக்குகள் உடையும். இதனால் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் பலவீனப்படும். எனவே தான் விஜய் தொங்கு சட்டமன்றத்தை உருவாக்க கூடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. ஆனால் இது எல்லாம் அவர் களத்தில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வைத்து மாறக்கூடும். ஆனால் விஜய் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை எல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது தேர்தல் சமயத்தில்தான் தெரியும்.
உதயநிதியின் நகர்வு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். தொகுதிகளுக்கு சென்று மக்களை பார்வையிட்டு வருகிறார். ஆனால் 26 -ல் திமுக வின் முகம் நிச்சயம் உதயநிதி இல்லை. 2026 -ல் இல்லை என்றாலும் 2031 -இல் நிச்சயம் விஜய் vs உதய் என்ற நிலை தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் உதயநிதியின் பலம் என்னவென்றால், திமுக இன்னமும் ஆட்சிக் கட்டிலில்தான் இருக்கிறது. தவிர ‘தேர்தல் நாள்’ என்று வந்தால் திமுக -வினரை போல வேலை செய்ய எந்த கட்சியாலும் முடியாது என்பது தமிழ்நாடே அறிந்தது.
மேலும் விஜய் அச்சுறுத்தலாகவே இருந்தாலும் எந்த பொது வெளியிலும் திமுக -வினர் விஜய் -யை தங்களது நேர் எதிரியாக முன்னிறுத்தியதே இல்லை. நேற்று சைதாப்பேட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போதுகூட “ஆம்புலன்ஸுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, தனது கட்சியே விரைவில் ஆம்புலன்ஸில் அனுப்பும் நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள் என்பது புரியவில்லை” என அதிமுக -வை தான் தாக்கி பேசியிருந்தார். விஜய் கட்சி துவங்கியதிலிருந்து இன்று வரை அவர் பெயரை கூட உதயநிதி போது வெளியில் உச்சரித்ததில்லை. அதற்கு காரணம் திமுக -விற்கு நிகரான எதிரியாக தவெக -வை கட்டமைக்க திமுக விரும்பவில்லை என்பதுதான்.
திமுக -விற்கு விஜய் எத்துணை பெரிய அச்சுறுத்தல் என்பது நன்கு தெரிந்திருந்தாலும், அவர்கள் ஒருபோதும் பயத்தை வெளிக்காட்டாமல் தான் அரசியல் செய்வார்கள் அதுதான் திமுக -வின் பலம். ஆனால் அதேதான் திமுக -வின் பலவீனமும். தங்களுக்கு எதிரியே இல்லை
என்று நினைக்கும் அரசை மக்கள் வெறுப்பார்கள். அதுமட்டுமின்றி திமுக மீது ஆண்டாண்டு காலமாக இருக்கும் பெரிய குற்றச்சாட்டு ‘வாரிசு அரசியல்’ அந்த குற்றச்சாட்டை முன்வைத்துதான் விஜய் அரசியல் செய்கிறார். அது தான் திமுக -வினருக்கு தூக்கமற்ற இரவுகளை வழங்கும் என்கின்றனர் ஆர்வலர்கள்.
60 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சியிலிருந்து வந்த உதயநிதியும், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்ற நடிகராக வலம் வந்து அரசியலில் இறங்கியுள்ள விஜய் -ம் நேருக்கு நேர் களத்தில் சந்திக்க உள்ளனர். விஜய் தெளிவாக திமுக எதிர்ப்பில் உறுதியோடு இருக்கிறார். ஆனால் திமுக அதிமுக -பாஜக கூட்டணியை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறது. தன்னோடு சண்டைக்கு கூட வராத ஒருவரோடு விஜய் எப்படி மோதுவார் என்ற கேள்வியும் உள்ளது. மேலும் துணை முதல்வர் உதயநிதி ஏதோ ஒரு கட்டத்தில் விஜயை நேரடியாக எதிர்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மக்களின் செல்வாக்கையும் ஏகோபித்த வரவேற்பையும் யார் பெறப்போகிறார் என்பது தேர்தல் நாளன்று தான் தெரியும். விஜய் -க்கு மக்கள் ஆதரவு கணிசமாக இருந்தாலும், அந்த ஆதரவு வாக்காக மாறும் என்று சொல்லிவிட முடியாது. தேர்தல் முடியும் வரை ஆருடம் கூட சொல்ல வழியில்லாத ஒரு தனித்துவமான தேர்தலாக 2026 களம் மாறியுள்ளது என்பது தான் உண்மை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.