முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், பல்வேறு திட்டங்கள், அவற்றின் நோக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், விவசாயிகளுக்கான நவீன வேளாண் கருவிகள் தொடர்பாக வேளாண் இயந்திரமயமாக்கல், வேளாண் இயந்திர வாடகை மையங்கள், வெற்றி வான்மகள் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "கிராம அளவில் வேளாண் இயந்திரங்களை பரவலாக்கும் நோக்கில், வேளாண் கருவிகள், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், சூரியக் கூடார உலர்த்திகள் முதலியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
2026–27ஆம் ஆண்டில், 227 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒன்றிய–மாநில நிதி ஒதுக்கீட்டில், 24 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், சுமார் 8,870 பவர் டிரில்லர்கள், 5,090 விசைக் களை எடுப்பான்கள், 1,400 சுழற்கலப்பைகள், 825 டிராக்டர்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டு, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டு முதல் சூரியக் கூடார உலர்த்திகள் அமைப்பதற்கான அதிகபட்ச மானியத் தொகை 3,50,000 ரூபாயில் இருந்து உயர்த்தப்பட்டு, 4,40,000 ரூபாயாக வழங்கப்படும்
பெண் விவசாயிகளிடையே வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க உதவும் ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்களை எளிதில் வாடகைக்கு பெற்று பயன்படுத்தி, வருமானத்தை உயர்த்தும் நோக்கில், 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இதற்காக 80 சதவீத மானிய அடிப்படையில், அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
மொத்தமாக 50 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இந்த ஆண்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 30 சதவீதம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயம், கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 2026 ஆம் ஆண்டினை சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்துள்ளது. பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக மாற்றுவதன் வாயிலாக வேளாண்மையில் உரம் பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் எளிதாக்கப்படும். அத்துடன் வேளாண் பணிகளில் ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வாய்ப்பாகவும் அமையும்.
இதற்காக தகுதி உள்ள நூறு மகளிர் உள்ளிட்ட 500 நபர்களுக்கு மாநில அரசின் செலவில் ட்ரோல் இயக்கும் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்படும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனத்தின் மூலம் (RPTO) ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். இதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மாநில நிதியில் இருந்து வழங்கப்படும். பெண்களைக் காக்க சிங்கப்பெண் படையை உருவாக்கிய நம் முதலமைச்சர் அவர்கள் விவசாயம் காக்க வான்மகள் படையை உருவாக்கி உள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்