கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோவிலுக்கு சீல் வைத்த கோட்டாட்சியரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் குளித்தலை அருகே உள்ள வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் அட்டவணைப் பிரிவு இளைஞரை சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் விடுவதற்கு மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோவிலுக்கு சீல் வைத்தனர்.
இதனால் ஆவேசமடைந்த குறிப்பிட்ட சமூக பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் கோயிலை கட்டியுள்ளதாகவும், முறையாக விசாரிக்காமல் சீல் வைத்ததாகவும் கூறி கோட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு கோட்டாட்சியர் வாகனம் விடுவிக்கப்பட்ட நிலையில், கோட்டாட்சியரின் வாகனம் மோதி இளம்பெண் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள் முறையாக விசாரிக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக, இதேபோன்ற ஒரு சம்பவத்தால் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி என்ற பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் சமிபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது கரூரிலும் கோவில் சீல் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.