விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஜாதி மத உணர்வுகளை தூண்டும் பாடல்களை போடக்கூடாது என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாக போட்டி போட்டுக் கொண்டு நடைபெறும். கடந்த காலங்களில் நடைபெற்ற மோதல் சம்பவங்களை தவிர்க்கும் விதமாக இன்று ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ராஜாதாணி காவல் ஆய்வாளர் சத்தியபிரபா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆண்டிபட்டி நகரில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நடைபெறும் ஊர்வலத்தில் ஜாதி மற்றும் மத ரீதியான பாடல்களை ஒளிபரப்ப கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் மோதல்களை தூண்டும் வண்ணம் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்றும் ஊர்வலத்தில் செல்லும்போது அமைப்புகள் தங்களுக்கு கொடுத்த நேரத்தில் ஊர்வலத்தை துவங்கி குறித்த நேரத்தில் முடித்துச்செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஊர்வலம் முடிந்து விநாயகர் சிலைகளை கரைக்கும்போது வைகைஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சட்ட திட்டங்களின் படியும் காவல்துறையின் வழிகாட்டல் படியும் செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதையும் படிக்க: பெண்ணிடம் அத்துமீறிய பைக் டேக்சி ஊழியர் கைது!