சத்யபாமா மீது திமுக புகார்! "பரபரக்கும் இடைதேர்தல் களம்" - யாருக்கு சாதகமாகும்?

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
by elctione
Published on: 
Updated on: 
2 min read

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 3 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 70.31 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 68.08 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் களத்தில் இருப்பதால், ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், மூதாட்டி ஒருவரிடம் குறிப்பிட்ட கட்சியின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தேர்தல் பணியாளர் கூறியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் பணியாளர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் திமுக மற்றும் தவெக தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் தேர்தல் அதிகாரிகளின் விளக்கத்தையடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. மேலும், தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என சத்யபாமா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதியில் வீராச்சிமங்கலம் கன்னிமார் கோவில் அருகே தவெக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்து வாக்கு சேகரிப்பதற்காக வந்தவர்கள் தேர்தல் விதிகளை மீறி தொகுதிக்குள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தவெக, அதிமுக மற்றும் திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுக வேட்பாளர் பானுமதியின் ஆதரவாளர்கள், தவெகவினரின் வாகனங்களைச் சூழ்ந்து சோதனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட எலப்பாக்கம் வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கேமராவை சரிசெய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், அதன்பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்டரைபுதுச்சேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியிலும் குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தில் அடையாள மை இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட இயந்திரம் மாற்றப்பட்டது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

தாராபுரம் கொட்டாப்புளிபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதேபோல், தாராபுரம் அருகே குண்டடம் மானூர்பாளையத்திலும் இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனிடையே, தாராபுரம் நகராட்சிப் பள்ளி உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்காளர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதி, வீராச்சிமங்கலம் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். திமுக வேட்பாளர் சுகன்யாவும் தனது வாக்கை பதிவு செய்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதியாக பதிவாகும் வாக்கு சதவீதம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே இரு தொகுதிகளிலும் வெற்றி யாருக்கு என்பது தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com