
அனைத்து நகர்ப்புறங்களிலும் பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தத்தக்க நடை பாதைகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையிலான அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. அதுவும் டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்கிறது. சபாநாயகர் அப்பாவு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே பேச வாய்ப்பு மறுப்பதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், தமிழக நிதிஅமைச்சர் பட்ஜெட்டை வாசித்து வந்தார். குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நகர்ப்புறங்களில் உள்ள அனைவருக்கும் கழிப்பறை அணுகும் வசதி ஏற்படுத்தப்பட்டு, திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறை ஒழிக்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இருபத்தி ஏழு நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதேபோல் அனைத்து மாநகராட்சியிலும் நாள் ஒன்றிற்கு ஒரு நபருக்கு 135 லிட்டர், நகராட்சிக்கு 90 லிட்டர், பேரூராட்சிக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும் எனவும் பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் தெரிவித்தார்.