

சென்னை வேளச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக, தன்னை முதலமைச்சராக்க சில அரசியல் முயற்சிகள் நடந்ததாக வெளியான தகவல்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “என்னை முதலமைச்சராக்க முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது உண்மைதான். ஆனால் அதற்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. சில நெருங்கிய நண்பர்கள் அந்த விவகாரம் குறித்து என்னை அணுகி பேசினார்கள். ஆனால் திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக என்னை தொடர்பு கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார். “வெறும் பதவி அல்லது அதிகாரத்திற்காக முடிவு எடுக்க முடியாது. எங்களுடைய எதிர்கால அரசியலையும் கருத்தில் கொண்டு தான் வெளியில் இருந்து ஆதரவு வழங்க முடிவு செய்தோம்” என்றார். திமுக கூட்டணியுடன் நீண்டகால அரசியல் உறவு இருப்பதால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை என்றும், கூட்டணியின் நிலைப்பாடுகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் திருமாவளவன் கூறினார். அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, 'அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தார்.
இதற்கிடையில், “தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்” என்ற அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சில ஊடகங்கள் தனது பேட்டியை திரித்து பரப்புவதாகவும், தேவையற்ற பரபரப்பை உருவாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துக்கு வேறு பொருள் கொடுத்து செய்திகளை வெளியிடுவது வேதனையளிக்கிறது” என்றும் தெரிவித்தார்.
“இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை” என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையளித்தேன். அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.