
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம் பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து கடந்த நான்கு நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உருவாகியுள்ளதால், திருவள்ளூரில் இருந்து உத்துக்கோட்டைக்கு செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.