தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; தந்திர மாடல் ஆட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில், ஒரு கோடியே, 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி வனவாசி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் வசதி, ஆழ்துளைக் கிணறு, பள்ளி வகுப்பறை மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளிட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டணமில்லா பேருந்துகளில் பெண்பயணிகளிடம் சாதி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை கேட்பது கண்டிக்கத்தக்கது என்றார். தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி என்று விமர்சித்தார்.
விவசாயிகளுக்கு உரிய நீரை பெற்றுத் தராமல் விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றி விட்டதாக புகார் கூறிய எடப்பாடி, குறுவைப் பயிர் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை ஊழல் தொடாபான வழக்கு குறித்த கேள்விக்கு, மடியில் கனமில்லை எனவே மனதில் பயமில்லை என்றும் பதிலளித்த எடப்பாடி, தற்போது திமுக அமைச்சர்கள்தான் அச்சத்தில் மூழ்கியுள்ளனர் என்றும் விமர்சித்தார்.