"என்னை தேர்வு செய்த..." - கீர்த்தனா நன்றி சொன்ன அந்த 'அண்ணன்' யார்? விஜய்யின் நிழல் இவர்தானா?

விஜய்க்குப் பின்பாக அமைச்சர் கீர்த்தனா “அண்ணன்கள்” என அழைப்பவர்களாக விஷ்ணுவும் ஜான் ஆரோக்கியசாமியும் இருக்கின்றனர்
"என்னை தேர்வு செய்த..." - கீர்த்தனா நன்றி சொன்ன அந்த 'அண்ணன்' யார்? விஜய்யின் நிழல் இவர்தானா?
Published on
Updated on
2 min read

நேற்று சட்டமன்றத்தில் தொழில்துறை மானியக் கோரிக்கைகள் நடைபெற்றன. அதில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, தமிழக முதலமைச்சர், தொகுதி மக்களுடன் இன்னும் சில ஆளுமைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

“எனக்கு சிவகாசி பொருந்தும் எனக் கணித்த அண்ணன்கள் விஷ்ணு மற்றும் ஜான் ஆரோக்கியசாமி, என் திறமையை நம்பி வாய்ப்பு கொடுத்த அப்பா ஆனந்த் அவர்களுக்கும், ஆதவ் அர்ஜுனா சார் அவர்களுக்கும்.. நன்றி” எனப் பேசினார் அவர்.

விஜய்க்குப் பின்பாக அமைச்சர் கீர்த்தனா “அண்ணன்கள்” என அழைப்பவர்களாக விஷ்ணுவும் ஜான் ஆரோக்கியசாமியும் இருக்கின்றனர்.

Vishnu Reddy, John Arokyasamy and Vijay
Vishnu Reddy, John Arokyasamy and Vijay

அதுமட்டுமல்லாமல், இவருக்கு சிவகாசி தொகுதி பொருத்தமாக இருக்கும் எனக் கூறி வாய்ப்பு வழங்கியது இவர்கள்தான் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். (முன்பு வாய்ப்பு கொடுத்தவர் முதலமைச்சர் விஜய்யாக மட்டுமே இருந்தார்.) தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு புதிய நபருக்கு சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு கொடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் இந்த விஷ்ணு ரெட்டி யார் என்று தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய்க்கு நெருக்கமான புள்ளிகள் என்றால், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜெகதீஸ், விஷ்ணு ரெட்டி ஆகியோரைக் கூறலாம். என்னதான், “என்னைத் தவிர இங்கு வேறு பவர் சென்டர்கள் இல்லை” என பதவியேற்கும்போது விஜய் கூறியிருந்தாலும், மேலே சொல்லப்பட்ட நபர்களும், சொல்லப்படாத சிலரும் தவெகவில் பவர் சென்டர்களாக இருக்கின்றனர். இதில் முக்கியமானவர் விஷ்ணு ரெட்டி. அமைச்சர் கீர்த்தனாவின் சட்டமன்றப் பேச்சே அதற்குச் சாட்சி.

விஷ்ணு ரெட்டி விஜய்யின் சிறுவயது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். விஜய் பார்க்கும் நபர்களிடம் எல்லாம் சகஜமாக நெருங்கிப் பழகும் தன்மை கொண்டவர் இல்லை என்பதும், அவரது நெருங்கிய நண்பர் வட்டம் மிகச் சிறியது என்பதும் பல பிரபலங்கள் பேட்டிகளில் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.

TVK vijay
Vijay

அப்படிப்பட்ட விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் கல்லூரிக் காலம் முதல் பயணித்து வருகிறார் விஷ்ணு ரெட்டி. இவர் விஜய்யின் நண்பராக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கெடுத்திருப்பார்.

ஆந்திராவில் இவருக்கு கிரானைட் உட்பட பல தொழில்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது முக்கியப் பணிகளை மேற்கொள்ள நம்பிக்கையான நபர்களைத் தேடியபோது, முதலில் வந்தவர்களில் விஷ்ணு ரெட்டியும் ஒருவர். விஜய்யின் முக்கிய நிர்வாகிகளுடனான பல ஆலோசனைக் கூட்டங்களில் விஷ்ணு ரெட்டி பங்கெடுத்து வந்தார். ஆனால், அவருக்கு கட்சிப் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் விஜய்யின் வாகனத்தில் சென்று வந்தவர்களில் இவரும் ஒருவர்.

தவெகவின் சமூக வலைத்தளக் கட்டமைப்பை உருவாக்கியதில் ஜெகதீஸ் பழனிசாமியைப் போல இவருக்கும் பங்கு உள்ளது. களப்பணிகளை மேற்கொள்வதிலும், வியூகங்களை வகுப்பதிலும் இவரது உள்ளீடுகள் இருந்துள்ளன. நிர்வாகப் பணிகளைத் தொய்வில்லாமல் பார்த்துக்கொண்டதிலும் இவர் விஜய்க்கு உதவியாக இருந்துள்ளார். இவ்வாறு தேர்தலுக்கு முன் முழுநேரமாக விஜய்யின் வெற்றிக்காகப் பணியாற்றிய இவர், கட்சியின் உயர்மட்டக் குழுவில் அழுத்தமாகக் கால்பதித்துள்ள நிர்வாகியாக இருக்கிறார். அரசிலும் முதலமைச்சரின் பொது நிகழ்வுகள் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Vijay with Vishnu Reddy
Vijay with Vishnu Reddy

அரசு நிர்வாகத்தில் முதலமைச்சரின் நேரடிப் பங்களிப்பை முறைப்படுத்துவது, மக்கள் குறைகளைக் கேட்கும் தளங்களை உருவாக்குவது மற்றும் பொது நிகழ்வுகளின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் முன்னின்று நடத்தும் பொறுப்புகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதலமைச்சரின் நற்பெயரை (Image) காப்பதில் இவர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.

விஷ்ணு ரெட்டி தவெகவில் முக்கியப் புள்ளி என்றாலும், ஒரு அமைச்சர் சட்டமன்றத்தில் நன்றி தெரிவிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவராக இருப்பது சற்று எதிர்பாராததே. கடந்த மாதம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்த ஆட்சியில் அமைச்சர்களைவிட ஜான் ஆரோக்கியசாமியும் விஷ்ணு ரெட்டியும் தான் அதிகாரமிக்கவர்களாக இருக்கின்றனர் எனப் பேசியிருந்ததை இந்த நிகழ்வு நிரூபிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

"என்னை தேர்வு செய்த..." - கீர்த்தனா நன்றி சொன்ன அந்த 'அண்ணன்' யார்? விஜய்யின் நிழல் இவர்தானா?
49 வழக்குகள்... குண்டர் சட்டம்... சட்டமன்றத்தை கலக்கிய தனி ஒருவர்! யார் இந்த பூண்டி கலைவாணன்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com