

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 1996 தேர்தலில் 1034 வேட்பாளர்கள் போட்டியிட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மொடக்குறிச்சி தொகுதியில், வரும் தேர்தலில் நிலவப்போகும் அரசியல் சூறாவளி குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மொடக்குறிச்சி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 25 சதவீதம் பேரும், 41 முதல் 60 வயதுடையவர்கள் 38 சதவீதம் பேரும் உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 25 சதவீதம் பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமுதாய ரீதியாகக் கொங்கு வேளாள கவுண்டர்கள் 30 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார் மற்றும் வேட்டுவ கவுண்டர்கள் தலா 12 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 54 சதவீதம் கிராமப்புறங்களையும், 45 சதவீதம் நகர்ப்புறங்களையும் உள்ளடக்கிய தொகுதியாகும்.
மொடக்குறிச்சி தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக் கழிவுகள் கலப்பது விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் என்பதும், புகழ்பெற்ற கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. ஆவல்பூந்துறை ஏரியைத் தூர்வார வேண்டும் மற்றும் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, பாஜகவின் சரஸ்வதி 43.5 சதவீத வாக்குகளைப் பெற்று மிகக் குறைந்த இடைவெளியில் வெற்றி பெற்றார். திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 43.3 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 148 பூத்களில் வலுவாகவும், திமுக 128 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 64 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இப்பகுதியில் பெரும் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 36 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 130 பூத்களில் வலுவாகவும், திமுக 115 பூத்களில் வலுவாகவும் உள்ளது. சுமார் 28 பூத்கள் மட்டுமே ஸ்விங் நிலையில் உள்ளன.
இந்தத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.