பேராவூரணி தொகுதியில் 'கெத்து' காட்டப்போவது யார்? தி.மு.க.வின் கோட்டையை அசைக்குமா அ.தி.மு.க.? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தாக்கம் இத்தொகுதியில் மற்ற இடங்களை விடக் குறைவாகவே இருக்கும்..
Peravoorani constituency
Published on
Updated on
3 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய தேர்தலுக்கு முந்தைய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் பேராவூரணி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள பேராவூரணி, கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயத் தொகுதியாகும். கடந்த 2011-ல் நடிகர் அருண் பாண்டியன் தே.மு.தி.க. சார்பில் வென்ற இத்தொகுதியில், தற்போது தி.மு.க.வின் அசோக்குமார் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். தென்னை விவசாயமே இத்தொகுதியின் முதுகெலும்பாக உள்ளது.

Peravoorani constituency

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பொறுத்தவரை, 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 38.73 சதவீதத்துடன் பெரும்பான்மையாக உள்ளனர். இளம் வாக்காளர்கள் (18-25 வயது) 12.11 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 29.61 சதவீதமும் உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் 19.52 சதவீதம் பேர் உள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் முத்தரையர் சமூகம் 27 சதவீதத்துடன் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. முக்குலத்தோர் 25 சதவீதமும், முஸ்லிம் வாக்காளர்கள் 12 சதவீதமும் உள்ளனர். யாதவர்கள் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் தலா 7 சதவீதம் பேர் இத்தொகுதியில் வசிக்கின்றனர்.

Peravoorani constituency

பேராவூரணி தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தென்னை விவசாயிகளுக்குத் தேவையான பாசன வசதி மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்கள் முறையாகக் கிடைக்காதது பெரும் குறையாக உள்ளது. விவசாய நிலங்களில் உப்பு நீர் புகுவதைத் தடுக்க வேண்டும் என்பதும், ஏரிகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்துதல், அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்தல் மற்றும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பேராவூரணி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்தல் போன்றவை மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன. மேலும், இப்பகுதியில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

பேராவூரணி தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள: இங்கே கிளிக் செய்யவும்

Peravoorani constituency

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் 52.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருஞானசம்பந்தம் 38.6 சதவீத வாக்குகளைப் பெற்றார். அப்போது நாம் தமிழர் கட்சி 7.2 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தை நிரூபித்தது.

Peravoorani constituency

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. 91 வாக்குச் சாவடிகளில் (Booths) பலமாகவும், அ.தி.மு.க. வெறும் 49 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன. அப்போது சுமார் 57 சாவடிகள் ஊசலாடும் நிலையில் (Swing) இருந்தன. தி.மு.க.வின் ஸ்ட்ராங் பூத்துகளுக்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே பெரிய இடைவெளி நிலவியது குறிப்பிடத்தக்கது.

Peravoorani constituency

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, பேராவூரணி தொகுதியில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த ஆய்வின்படி தி.மு.க. 38 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் என்றும், அ.தி.மு.க. 33 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் சுமார் 5 முதல் 6 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தாக்கம் இத்தொகுதியில் மற்ற இடங்களை விடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, தி.மு.க. 130 வாக்குச் சாவடிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. வெறும் 80 சாவடிகளில் மட்டுமே வலுவாக இருக்கிறது. சுமார் 25 வாக்குச் சாவடிகள் மட்டுமே ஊசலாடும் நிலையில் (Swing) இருப்பதால், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய எம்.எல்.ஏ. அசோக்குமார் மீண்டும் களம் இறங்கும் பட்சத்தில், சமுதாய ஈக்குவேஷன்களும் தி.மு.க.விற்குச் சாதகமாகவே உள்ளன. விவசாயம் சார்ந்த இப்பகுதியில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வேட்பாளர் மீதான நற்பெயர் தி.மு.க.விற்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com