

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் கீழ்வைத்தியனான்குப்பம் (கே.வி. குப்பம்) தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தின் முழுமையான கிராமப்புறத் தொகுதியான கே.வி. குப்பம், விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி அவர்கள் மீண்டும் களம் காணும் நிலையில், இங்கு நிலவும் அரசியல் சூழல் குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கே.வி. குப்பம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 13.1 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.4 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.1 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 17.6 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக நாயுடு சமுதாயத்தினர் 25 சதவீதம் பேரும், வன்னியர்கள் 20 சதவீதம் பேரும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதம் பேரும் உள்ளனர். முதலியார் சமூகத்தினர் 10 சதவீதம் பேர் உள்ளனர். இது 90 சதவீதம் கிராமப்புறங்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும்.
இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக மாம்பழச் சீசனில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் விவசாயிகள் நஷ்டமடைவது பெரிய குறையாக உள்ளது. கிராமப்புறங்களுக்குப் போதிய அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததும், தாலுகா அலுவலகம் குறுகிய வாடகைக் கட்டிடத்தில் இயங்குவதும் மக்களின் வேதனையாக உள்ளன. கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசியால் பயிர்கள் மற்றும் மனிதர்கள் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதும், தக்காளி மற்றும் காய்கறிகளைச் சேமிக்கக் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளாக உள்ளன.
கே.வி. குப்பம் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, அதிமுக கூட்டணியின் (புரட்சி பாரதம்) ஜெகன்மூர்த்தி 48.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் சீதாராமன் 42.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் அதிமுக 145 பூத்களில் வலுவாகவும், திமுக 120 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 50 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இப்பகுதியில் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 36 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 15 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 155 பூத்களில் மிக வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 90 பூத்களில் மட்டுமே வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 83 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. வெற்றி வித்தியாசம் 8 சதவீதமாக இருக்கும் என்பதால் கே.வி. குப்பத்தில் அதிமுகவின் கை ஓங்கியிருப்பதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.