மீன்பிடி தடைகாலத்தில் வெளிநாட்டு விசைப்படகுகளை மட்டும் மீன்பிடிக்க அனுமதிப்பது ஏன்? காசிமேடு மீனவர்கள் கேள்வி! 

மீன்பிடி தடைகாலத்தில் வெளிநாட்டு விசைப்படகுகளை மட்டும் மீன்பிடிக்க அனுமதிப்பது ஏன்? காசிமேடு மீனவர்கள் கேள்வி! 
Published on
Updated on
2 min read

மீன்பிடி தடைகாலத்தில் வெளிநாட்டு விசைப்படகுகளை மட்டும் மீன்பிடிக்க அனுமதிப்பது ஏன்? என காசிமேடு மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்காக இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜீன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதிக்கப் படுவதில்லை.  சிறிய அளவிலான பைபர் படகுகளில் மட்டுமே 9 நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் உள்நாட்டில் மீன்களுக்கான பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த 61 நாட்கள் தடைகாலத்தை, கேரள மாநிலத்தில் 52 நாட்கள் கடைபிடிப்பது போல தமிழ்நாட்டிலும் மீன்பிடி தடைகாலத்தை குறைக்க அரசு முன்வரவேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதனையொட்டி, முன்கூட்டியே 46 நாளில் தாங்களும் கடலுக்கு செல்ல இருப்பதாக கூறி பேனர்கள் வைத்து காசிமேட்டை சேர்ந்த மீனவ சங்கத்தின் கூட்டமைப்பினர் பேனர்களை வைத்துள்ளனர்.

இதுத் தொடர்பாக மீன்வள துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், 52 நாட்கள் கேரளாவில் தடைகாலம் கடைபிடிப்பது போல தமிழகத்திலும் தடைக்காலம் கடைபிடிக்க வேண்டுமென கோரிக்கைகள் முன்வைத்தனர். மேலும், இந்த 61 நாட்களில் வெளிநாட்டுப் படகுகள் வங்காள விரிகுடா கடல் எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு மீன் பிடித்து வருவதாகவும் அவற்றை தடை செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

இதற்காக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் முன்கூட்டியே தாங்கள் தடைகாலம் முடிவடைவதற்குள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க இருப்பதாகவும் எனவே இதனை மத்திய மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டுமென மீனவ சங்கத்தை சேர்ந்த விஜேஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மீன்வள துணை இயக்குநர் அஜய் ஆனந்தை தொடர்புகொண்டு கேட்டபோது "61 நாட்கள் முன்னர் தடையை மீறி கடலுக்கு தொழிலுக்கு செல்லூம் விசைப்படகுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு   விசைப்படகு பறிமுதல் செய்யப்படும்" என தெரிவித்தார்.

ஒருபுறம் தடைகாலம் முடிவடைவதற்குள்ளேயே கடலுக்கு சென்று மீன்பிடிக்க முனைப்பு காட்டும் மீனவர்கள் மறுபுறம் கடலுக்கு சென்றால் விதிமீறல் என விசைப்படகை பறிமுதல் செய்யவிருக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் என எதிரெதிராய் நிற்கும் இப்பிர்ச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com